கூடலூர், மே 7-கூடலூர் மைசூர் தேசியநெடுஞ்சாலையில் அரசுவாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 22 பேர் காயமடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் உதகைக்கு ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் கூடலூர்- மைசூர் நெடுஞ்சாலையில் செவ்வாயன்று காலை 10.30 மணிக்கு பொக்காபுரம் என்றஇடத்தில் இருந்து கூடலூரை நோக்கி அரசு பேருந்து 64 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது உதகையிலிருந்து மைசூரை நோக்கிசென்று கொண்டிருந்த அரசு பேருந்துமீது நேருக்கு நேர் மோதியது. இதில்தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்தின் ஓட்டுநர் ஜலில் (43), கர்நாடகா மாநில போக்குவரத்துக் கழகபேருந்தின் ஓட்டுநர் பன்னாரி (56)மற்றும் 20 பயணிகள் காயமடைந்தார்கள். உடனடியாக இவர்கள் மீட்கப்பட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவ்விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.