விபத்து தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
தருமபுரி, ஏப். 26-அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் விபத்து தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.தருமபுரி மாவட்டம், அரூர் பகுதி நேர மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் விபத்து தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமை நடைபெற்றது. இம்முகாமில் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள், தங்களது வாகன உரிமம் மற்றும் பதிவை புதுப்பிக்க வந்திருந்தனர். அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர் செல்வம் பேசுகையில், இருசக்கர வாகனங்களில் கண்டிப்பாக பக்கவாட்டு கண்ணாடி வைக்க வேண்டும். வளைவுகளில் திரும்பும் போது உரிய எச்சரிக்கை செய்யவேண்டும். ஹெல்மெட் அணிந்து வாகனங்களில் செல்ல வேண்டும். சாலைகளில் செல்லும்போது செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். விபத்தை தவிர்க்க வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என்றார். இந்த விழிப்புணர்வு முகாமில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி தீவிரம்
ஈரோடு, ஏப். 26-ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் மகேஷ்வரன் (25). இவர் துணிகளுக்கு இஸ்திரி போடும் வேலை செய்துவந்தார். தனது நண்பர்கள் சிலருடன் வியாழனன்று மாலை ஈரோடு ரங்கம்பாளையம் அருகே இரட்டைபானி வலசு பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளார். அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது மகேஸ்வரன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை கண்ட மகேஷ்வரனின் நண்பர்கள் அவரை காப்பாற்ற முற்பட்டனர். எனினும் மகேஷ்வரனை காப்பாற்ற முடியவில்லை.இதனையடுத்து ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் மகேஷ்வரனைதேடும் பணியில் ஈடுபட்டனர். மகேஷ்வரன் கிடைக்காத நிலையில் வெள்ளியன்றும் தேடுதல் பணி தொடர்ந்தது. இதுவரை அவரை கண்டு பிடிக்கமுடியவில்லை. இதுகுறித்து ஈரோடு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.