கோவை, மார்ச் 16 – அரசியல் ஆதாயம் தேடுவதற்காக ஆட்டோக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து ஆட்டோ சங்க கூட்டு கமிட்டி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரிடம் திங்களன்று மனு அளித்தனர். இதுகுறித்து அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறுகையில், கோவையில் கடந்த சில நாட்களாக திட்டமிட்டு ஆட்டோக்கள் மற்றும் ஓட்டுனர்களை தாக்கி வருகின்றனர். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக திட்டமிட்டு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இவ்வாறான செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுத்து கைது செய்ய வேண்டும். மேலும், மாநகரின் முக்கிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் வாடகையை நம்பி இரவு நேரங்களில் ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் இரவு நேரத்தில் ஆட்டோக்களை இயங்க அனுமதிக்காமலும், பயணிகளின் அவசரத்திற்காக செல்லும் ஆட்டோக்களை நிறுத்தி ரூ.200 அபராதமும் விதிக்கின்றனர். இது ஆட்டோ ஓட்டுனர்களை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது.
எனவே ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே ஆட்டோக்களை இயக்க வேண்டும் என்கிற உத்தரவை காவல்துறை வாபஸ் பெற வேண்டும் என மனு அளித்ததாக தெரிவித்தனர். மேலும், இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர், இரவில் செல்லும் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது அபராதம் விதிக்காமல் இருப்பதை தலையிட்டு நிறுத்துவதாகவும், ஓரிரு நாட்களில் இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடுவோம் எனவும், இதன்பிறகு எப்போதும் போல் ஆட்டோக்களை இயக்க அனுமதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதில், ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அதிகாரிகளை சந்திக்க சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சிஐடியு ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் செல்வம், முத்துகுமார், மாணிக்கவாசகம், எல்பிஎப் சங்கத்தின் வணங்காமுடி, எம்எல்எப் சங்கத்தின் சாஜகான், எஸ்டிடியு சாஜகன், ஏஐடியுசி சிவசண்முகம் உள்ளிட்ட ஏராளமான ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்றனர்.
சாலையோர வியாபாரிகள் மனு
இதேபோல், கோவை மாநகர காவல்துறையின் உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், சாலையோர கடைகள், தள்ளு வண்டி விற்பனை மூலம் ஈட்டி வந்த வருமானம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து சாலையோர நடைபாதை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கோவையில் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர் நடைபாதைகளில் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றோம். தள்ளு வண்டிகளில் பழங்கள், இரவு நேர உணவு கடைகள் என ஏராளமானோர் தொழில் செய்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ள நிலையில் இரு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக கோவையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையும், பாதுகாப்பு காரணங்களையும் கருத்தில் கொண்டு மாநகர காவல்துறை குறிப்பிட்ட நேரத்திற்குள் அனைத்து வியாபார நிறுவனங்கள், சாலையோர கடைகள், தள்ளு வண்டி வியாபாரங்களை முடித்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவின் காரணமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், சாலையோர கடைகள், தள்ளு வண்டி விற்பனை மூலம் ஈட்டி வந்த வருமானம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் வியாபாரம் மேற்கொண்டு வரும் நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை நடைபாதை, தள்ளு வண்டி வியாபாரம் செய்ய வேண்டாம் என்ற அறிவிப்பை தளர்த்தி வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்ததாக தெரிவித்தனர்.