tamilnadu

img

ஆளும் கட்சியைச் சேர்ந்த சமூக விரோதியை கைது செய்திடுக

திருப்பூர், ஏப். 29 -தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 18ஆம் தேதி திருப்பூரில் வாக்காளர்களுக்குப் பணம், மதுபாட்டில் கொடுத்து அதிமுகவுக்கு ஓட்டுகேட்ட சமூக விரோதியை கைது செய்யக்கோரி அனைத்துக் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வாக்குப்பதிவு நடைபெற்றபோது, திருப்பூர் வடக்குத் தொகுதிக்கு உட்பட்ட 168 முதல்174 வரை உள்ள 7 வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு அதிமுக 33ஆவது வார்டு எம்ஜிஆர் மன்றச் செயலாளராக இருக்கும், டாஸ்மாக் மதுக்கடைபார் நடத்தி வரும் பா.கருப்புசாமி பணமும், மதுபாட்டிலும் கொடுத்திருக்கிறார். அத்துடன் அதிமுக நிர்வாகிகள் பொன் ராஜேந்திரன், வினோத்,மணி, மணிவண்ணன், விஜய் உள்ளிட்டோர் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டனர். இது பற்றி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நிர்வாகிகள் காவல் துறையிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால்இந்த சம்பவத்தில் குற்றத்தை மறைப்பதற்காக கருப்புசாமி அரசு மருத்துவமனையில் சேர்ந்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நிர்வாகிகள்மீது பொய்ப்புகார் கொடுத்திருக்கிறார். அந்த புகாரை பதிவு செய்தவடக்கு காவல் துறையினர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தோர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கின்றனர். இது குறித்து ஏற்கெனவே தேர்தல்அலுவலரான மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமியிடம் புகார்அளிக்கப்பட்டது. சமூக விரோதியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அதிமுகவினர் மீதும் நடவடிக்கை எடுக்காமல், எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் நிலையில் 33ஆவது வார்டு அரசியல் கட்சியினர், பொது மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். எதிர்க்கட்சியினர் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யவும், ஆளும் கட்சியைச் சேர்ந்த சமூக விரோதியை கைது செய்யவும்,அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன் மீது வழக்குப் பதிவு செய்யவும் வலியுறுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகஆட்சியர் பழனிச்சாமி பதிலளித்ததாகத் தெரிவித்தனர்.அத்துடன் வாக்காளர்களுக்கு அரசுத்தரப்பில் வழங்க வேண்டிய பூத் சிலிப் எனப்படும் வாக்காளர் சீட்டுகளையும் கருப்பசாமி விநியோகம் செய்திருக்கிறார். இவருக்கு உடந்தையாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.