நீர் நிலைகளை சேதப்படுத்தும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள்!
வேலூர் கே.வி. குப்பத்தில் திங்களன்று மோர்தானா அணையின் இடது பிரதான கால்வாயை ரூ 2.5 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி புனரமைக்கும் பணியினை மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மோர்தானா அணையில் இடதுபுற கால்வாய் தூர்வாரப்பட்டால் 7ஏரிகள் மற்றும் 1900 எக்டர் நிலம் பாசன வசதி பெற்றுவருகிறது. இதில் தூர்வாரப்படும் பணியை அவ்வப்போது நேரடியாக சென்று ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பாலாற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில்,பொய்கை,கவசம்பட்டு உள்ளிட்ட பல இடங்களில் அணைகள்கட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டில் பாலாற்றில் மூன்று தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள் மற்றும் ஏரிகளை பராமரித்து தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் அரசுக்கு சொந்தமான நீர் நிலைகளை சேதப்படுத்தி தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர். இது சட்டத்திற்கு புறம்பான செயலாகும் அவ்வாறு அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளை சேதப்படுத்தும் நபர்கள் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.