படப்பை, ஏப். 9-
நீட்தேர்வில் தமிழக மாணவர்களுக்கு துரோகம் இழைத்த அதிமுக,பாஜகவுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் தக்கபாடம் புகட்டவேண்டும் என்று மார்க்சிஸ்ட்கடசியின் மத்தியக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கேட்டுக்கொண்டார். திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவிற்கு வாக்கு சேகரித்து படப்பையில் திங்களன்று (ஏப்.8) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:அறந்தாங்கியில் பெரியார் சிலையை சேதப்படுத்தி தலையை வெட்டி எடுத்துள்ளனர். அதை செய்தவர்களின் நோக்கமே மாற்றுச் சிந்தனை மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது என்பதுதான். நாட்டின் ஒருமைப்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்து முஸ்லீம், கிருத்துவர்கள் ஒன்றாக வாழக்கூடிய நாட்டில் மதநல்லிணக்கத்தைச் சிதைத்து மதமோதலை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ், பாஜகவின் நோக்கம்.பாஜக தனது தேர்தல் அறிக்கைக்கு சங்கல்ப பிராதானம் எனப் பெயர் வைத்துள்ளது. அதில் ராமர் கோயில் நிச்சயமாகக் கட்டப்படும். எனத் தெரிவித்துள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மசூதியை இடிக்காதீர்கள் அதற்கு அருகிலேயே வேண்டுமானால் ராமர் கோயில் கட்டுங்கள் நாங்கள் நிதி வசூல் செய்துகூட தருகிறோம் என்று மேற்கு வங்கத்தின் முன்னாள்முதல்வர் மறைந்த தலைவர் ஜோதிபாசு தெரிவித்தார். தேச ஒற்றுமைக்காக பாபர் மசூதியை இடிக்காமலே அதற்கு அருகில் ராமர்கோயில் கட்ட முடியும். தற்போதுஇவர்கள் 3000 மசூதியை இடிக்கவேண்டும் எனவும் மாதாகோவில்களை அகற்ற வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
மக்களின்வாழ்க்கை நிலையைப் பற்றிய கவலை இவர்களுக்கு இல்லை. விவசாயிகளின் வருமானத்தை மூன்று மடங்கு பெருக்குவோம் என்றுகூறி ஆட்சிக்கு வந்தவர்கள் நடைமுறையில் விவசாயிகளின் நிலங்களை பிடுங்கி எட்டுவழிச்சாலை என்ற பெயரில் அப்பாவிஏழை எளிய நடுத்தர விவசாயிகளை அழ வைத்தார்கள். சென்னை- சேலம் 8வழிச்சாலைத்திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது.ஆனால் மாநில அரசு மேல்முறையீடு செய்வேன் என்கிறது. மோடியும் எடப்பாடியும் விவசாயிகளைப் பற்றி கவலைப்படவில்லை. பாஜக தேர்தல் அறிக்கையில் மற்றொரு வாக்குறுதி என்னவென்றால் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் தரப்போகிறார்களாம். ஐந்து ஆண்டுகளில் எதையும் செய்யாத இவர்கள் இனிமேலாவது செய்யப்போகிறார்கள். நீட் தேர்வைத் தமிழக மக்கள் எதிர்த்தபோது நீட் தேர்வு வேண்டாம் என்றுசட்டமன்றத்த்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழத்திற்கு ஓராண்டு விலக்கு வாங்கித்தருகிறேன் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பொன்ராதாகிருஷ்ணனும் கூறினார். இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஜனாதிபதிக்கு நான் கடிதம் எழுதினேன். அங்கிருந்து வந்த பதில் கடிதத்தில் அதுபோன்று மசோதா ஏதும் எனது அலுவலகத்திற்கு வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தமசோதா உள்துறை அமைச்சரிடமே உள்ளது. இதுகுறித்து அவரிடம்கேட்டால் அவர் சிரிக்கிறார். இதற்குஎடப்பாடி பதில் சொல்ல வேண்டாமா. தமிழக மாணவர்களைப்பற்றி ஆட்சியாளர்களும் கவலைப்படவில்லை, உச்சநீதிமன்றமும் கவலைப்படவில்லை. கடைசியில் 24ஆயிரம் மாணவர்களின் எதிர்காலத்தை சீரழித்துவிட்டனர். இப்படி துரோகம் செய்த பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் வாக்களிக்கப் போகிறீர்களா? இவ்வாறு டி.கே.ரங்கராஜன் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் பி.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், திமுக ஒன்றிய செயலாளர் மனோகரன், மதிமுக மாவட்ட அவைத் தலைவர் செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிவிநாயகம், காங்கிரஸ் கட்சி நிர்வாகி மணிகண்டன், திராவிடர்கழக மாவட்ட நிர்வாகி நாத்திகன், சிபிஎம்மாவட்டக்குழு உறுப்பினர் டி.லிங்கநாதன் உள்ளிட்ட பலர் பேசினர்.