சென்னை:
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என மத்திய அரசு 2015 ஆம் ஆண்டு அறிவித்தது. அமைச்சரவை ஒப்புதலும் அளித்தது.பின்னர் இதற்காக மதுரை மாவட்டம் தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அத்தோடு கிடப்பில் போடப்பட்டது. மக்களவை தேர்தலை எதிர் கொள்வதற்காக அவசரஅவசரமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019 ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
பிறகு, அந்த மருத்துவமனைக்கு நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ரவீந்திரநாத் எம்.பி., மாணிக்கம் தாகூர்எம்.பி. ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு.வெங்கடேசன் நிர்வாக குழுவில் இருந்து விலகிக்கொண்டார்.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும், எய்ம்ஸ் மருத்துவமனை பிரச்சனைபூதாகரமாக எதிரொலித்தது. ஆயினும்கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒற்றைச் செங்கலை காண்பித்து இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்றுதிமுக இளைஞரணி மாநில அமைப்பாளரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரம் மதுரை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மக்களின்கவனத்தை ஈர்த்தது.
சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பை ஏற்றிருக்கிறார்.இந்நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
“மதுரையில் புதிய எய்ம்ஸ்மருத்துவமனையைத் தொடங்குவதற்காக 27.1.2019 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இம்மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டு, சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிலம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில், இவ்விடத்தில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென்றும், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்குப் பணிகளைச் செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டுமென்றும் பிரதமருக்கு, முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்”.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.