tamilnadu

img

கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க சிந்திக்காமல் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் தொடுக்கும் மோடி அரசு.... தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்....

 சென்னை:
தேசத்தையே அச்சுறுத்திக் கொண்டுள்ள கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க சிந்திக்காமல், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் பணியை முடுக்கிவிட்டு, முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் தொடுக்கும் மத்திய மோடி அரசுக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன், க.உதயகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மத்திய பாஜக அரசு சமீபத்தில்குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் வசித்து வரும் முஸ்லிம்கள் அல்லாதஇதர பிரிவினராக உள்ள ஹிந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜெயினர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யும் வகையில், இத்தகையவர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு விடுத்துள்ளது. இந்த அறிவிப்பானது 1955ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தின் கீழ் வெளியிடப்படுகிறது என்று கூறியுள்ளது .  2009 ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட விதிமுறைகள்படி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.2019 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு விதிமுறைகள் எதுவும் வகுக்கப்படாத நிலையில் ,அதே வகையிலான (2019 சட்டத்திருத்தம்) முஸ்லிம்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை 1955 ஆம் ஆண்டில்நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை வைத்தே பாஜக அரசுநிறைவேற்ற முனைகிறது.  2019ஆம் ஆண்டில் மத்திய பாஜக அரசுமுஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கும் வகையில் குடியுரிமை
திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தபோது முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து பகுதி மக்களும் இந்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வலுவான குரல் எழுப்பினர். பல்வேறு மாநிலங்களில் இதற்கென சிறைக்கூடங்கள் நிறுவப்பட்டன. பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அந்த சட்டத்திற்கான விதிமுறைகளை நிறைவேற்றாமல் மத்திய அரசு தள்ளிப் போட்டது.

இதற்கிடையில் இந்திய மக்களையும், ஏன்- உலகத்தையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி லட்சக்கணக்கானோரை பலி கொண்ட கொரோனா தொற்று நோய் முதல் அலை வந்தது. தற்போது இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் இத்தருணத்தில் அதுபற்றி மக்களைக் காப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி சிந்திக்காமல் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு தாக்குதலை இந்த சந்தர்ப்பத்தில் தொடுக்க முனைகிறது பாஜக அரசு. மத்திய பாஜக அரசின் இந்த கொடும் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு இது போன்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது இந்த சட்டம் ஒன்பது மாநிலங்களிலும் இருபத்தோரு மாவட்டங்களிலும் அமலாகும் வாய்ப்பு உள்ளது.உடனடியாக மத்திய அரசு முஸ்லிம்களுக்கு எதிரான இத்தகையமத விரோத நடவடிக்கையை கைவிட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தி கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தை ஒன்றிணைந்து நடத்தி மக்களை காக்க வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.