tamilnadu

img

தமிழ்நாட்டிற்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் ரவியை திரும்பப் பெறுக - சிபிஎம் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டிற்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஆளுநருக்குரிய அதிகார வரம்புகளை மீறி செயல்படுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மாநில அமைச்சரவையின் ஆலோசனைகளை ஏற்றுத்தான் ஆளுநர் செயல்பட முடியும் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய பிறகும் அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.

தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமலேயே சமீபத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை, வேந்தர் என்ற முறையில், ஆளுநர் நடத்தியுள்ளார். மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால்,  தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்க வேண்டிய உயர்கல்வித்துறை அமைச்சர் அழைக்கப்படவில்லை. இம்மாநாட்டில் பேசிய ஆளுநர், தமிழக முதலமைச்சர் அண்மையில் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தார். நாம் கேட்பதாலோ, அவர்களுடன் பேசுவதாலோ முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என்றும், அதற்கான கட்டுமான வசதிகள் தமிழ்நாட்டில் இல்லை எனவும் பேசியுள்ளார். ஆளுநரின் இந்த பேச்சு உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே விரோதமானதாகும். தமிழ்நாட்டில் மூலதனமிட தயாராக உள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களை தடுக்கும் வகையில் ஆளுநரின் பேச்சு அமைந்துள்ளது. மேலும், அனைவருக்கும் கல்வி என்கிற கோட்பாட்டைப் பின்னுக்குத் தள்ளுகிற ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கை அவசியமானது எனவும் ஆளுநர் பேசியுள்ளார்.

மேலும், மற்றொரு கூட்டத்தில் மொழிவழி மாநில கருத்தாக்கத்தை விமர்சித்துள்ளார். ஒரு மாநிலத்திற்கென்று தனி பண்பாடு, கலாச்சாரம் இல்லை, தமிழர், தெலுங்கர் என்பது கற்பனையான அடையாளம் என்று பேசியதன் மூலம் தேசிய இன அடையாளத்தையே நிராகரித்துள்ளார். மாநிலங்களின் ஒன்றியமே பாரதம் என்ற அரசியல் சாசனத்திற்கு மாறாக, இந்த அடையாளங்கள் தேசத்தை பலவீனப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசன அடிப்படையில் உருவாக்கப்பட்ட பதவியிலிருந்து கொண்டு அதற்கு புறம்பாகவே பேசுவது முற்றிலும் அநியாயமானது. ஆளுநரின் இத்தகைய கருத்துக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

அரசியல் சாசனத்திற்கு விரோதமாகவும், ஆர்.எஸ்.எஸ்-இன் அரசியல் கருவியாகவும் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமெனவும், இவரை ஆளுநர் பொறுப்பிலிருந்து பதவி நீக்கம் செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.