சென்னை:
தமிழகத்தில் இளநிலை தொழிற் கல்விப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு ஏன்? என்று பேரவையில் முதல்வர் விளக்கம் அளித்தார்.2021ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இளநிலைத் தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் தொடர்பான சட்ட முன்வடிவை முதல் வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய் தார்.அப்போது அவர் உரையாற்றியது வருமாறு:-
தொழிற்கல்விப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், நகர்ப் புறங்களிலுள்ள தனியார்ப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களைவிட, கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சேர்க்கை பெறுவதைக் கருத்திலே கொண்டு, 1997ஆம் ஆண்டு, கிராமப்புறப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்குத் தொழிற்கல்விப் படிப்புகளில் 15 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குக் கல்விக் கட்டணச் சலுகை அளிக்கப்பட்டது.
கிராமப்புற மாணவர்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சிரமங்களைக் கருத்திலேகொண்டு, 2006ஆம் ஆண்டு, தொழிற்கல்விப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, 2007-2008 ஆம் ஆண்டு முதல் 12 ஆம் தேர்வில் பெற்ற மதிப் பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இருப்பினும், கடந்த பல ஆண்டுகளாக நமது மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுடன் போட்டியிட்டு, அவர்கள் விரும்பக்கூடிய உயர் கல்வியினைப் பெறுவதும், தொழிற்கல்விப் படிப்புகளில் சேருவதும் மிகவும் கடினமாக இருக்கிறது. பல்வேறு சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி பெறுவதில் சமவாய்ப்புக் கிடைக்கப்பெறவில்லை. ஏற்கெனவே, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க் கையில் தேசிய தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப் பட்டு வருகிறது.
மருத்துவப் படிப்பைப் போன்றே, கால்நடை மருத்துவம், வேளாண் கல்வி, பொறியியல், சட்டம் போன்ற இதரத் தொழிற்கல்விகளிலும், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர் களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருக்கிறது.இந்த காரணத்தால், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூகப் பொருளாதார நிலைகள், அத்தகைய மாணவர்கள் அனுபவித்த குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் மற்றும் பல்வேறு வகைகளிலான தொழிற் கல்விப் படிப்புகள், கல்வி நிறுவனங்களில் அவர்களின் முந்தைய சேர்க்கை தொடர்பான சிக்கல்களை ஆய்வு செய்து மற்றும் அவர்களது குறைந்த பிரதிநிதித்துவத்திற்கு மேற்கூறப் பட்ட காரணங்கள் வழிவகுத்திருந்தால், அவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான தீர்வு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க தில்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்றத் தலைமை நீதிபதி, நீதியரசர் த. முருகேசன் தலைமையில், மூத்த அலுவலர்களைக் கொண்ட ஓர் ஆணையம் அரசால் அமைக்கப்பட்டது.ஏற்கனவே, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5 சதவீதம் முன்னுரிமை வழங்கியுள்ளதுபோல, பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற தொழிற் கல்விப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்து இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும், ஏழரை சதவீதம் இடங்கள் முன்னுரிமையின் அடிப் படையில் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும் என முடிவு எடுக்கப் பட்டுள்ளது.இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.