tamilnadu

img

மதப் பகைமையை உருவாக்கும் பாஜகவின் முயற்சியை முறியடிப்போம்... தமிழக மக்களுக்கு சிறுபான்மை மக்கள் நலக்குழு அறைகூவல்....

சென்னை:
தமிழகத்தில் மதப் பகைமையை உருவாக்க முயற்சிக்கும் பாஜக மற்றும் இந்துத்துவா சக்திகளின் நடவடிக்கையை ஒன்றிணைந்து முறியடிப்போம் என்று தமிழக மக்களுக்குதமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.

இதுகுறித்து சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, மாநிலப் பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  

தமிழகத்தில் மதப் பகைமையை உருவாக்கி அரசியல் ஆதாயம் அடைய பாரதிய ஜனதா கட்சியும்,இந்துத்துவா சக்திகளும் எடுத்துவரும் முயற்சிகளை முறியடித்திட அனைத்துப் பகுதி மக்களும் ஒன்றிணைந்து ஒற்றுமைக்காக குரல் எழுப்ப வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது காவல்துறையும், தமிழக அரசும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சமீபத்தில் கோவை மாவட்டம்மேட்டுப்பாளையத்தில் கொரோனா விதிமுறைகள் எதுவும் கடைப்பிடிக்காமல் பாரதிய ஜனதா கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கல்யாணராமன் என்பவர் இஸ்லாமியர்கள் பெரிதும் மதிக்கும் நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தி கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதுபோன்ற கருத்துக்களை தொடர்ந்து கல்யாணராமன் போன்றவர்கள் தெரிவித்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. மக்களின் ஒற்றுமையை சிதைத்து, பகைமையை ஏற்படுத்திக் கலவரத்தை உருவாக்கும் கெட்ட நோக்கத்தோடு செயல்படும் இதுபோன்ற நபர்கள் மீது தமிழகத்தில் நடைமுறையில் இருக்கிற கடுமையான சட்டங்களை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். இது போன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட தமிழகஅரசும், காவல்துறையும் விழிப்போடு இருந்து கடமையாற்ற வேண்டும்.

தாங்கள் கொண்டு வந்திருக்கிற சட்டத்தின் நியாயத்தை பேசுவதற்கு திராணி இல்லாதவர்கள் சிறுபான்மை மக்களை, தொழிலாளர்களை, விவசாயிகளை ஏளனம் செய்தும்,பழித்தும்,அவதூறு செய்தும், கலவரத்தை தூண்டும் வகையிலும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளுக்காக போராடி வருகிற இந்த சூழலில் மக்களின் துயரங்களை திசை திருப்பும் நடவடிக்கை இது. இந்த வகுப்புவாத முயற்சிகள்  அனைத்தும் முறியடிக்கப்பட வேண்டும். பாரதிய ஜனதாகட்சியின், இந்துத்துவா சக்திகளின் இது போன்ற திசைதிருப்பும் நடவடிக்கைகளை கவனத்துடன் அணுகி அவர்களின் தீய நோக்கங்களை முறியடித்திட அனைத்து பகுதி மக்களும் ஒன்றுபட்டு குரல் கொடுத்துபோராட வேண்டும் என சிறுபான்மை மக்கள் நலக்குழு அனைத்துப் பகுதி மக்களையும் கேட்டுக்கொள்கிறது. 

தமிழகத்தின் பொது அமைதிக்கு எதிராக, பாதகமாக செயல்படும் இதுபோன்ற இந்துத்துவ சக்திகளை ஆரம்ப நிலையிலேயே சட்டரீதியாக தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து தடுத்து நிறுத்த தமிழக அரசும், காவல்துறையும் தயக்கமின்றி ஈடுபடவேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.