சென்னை:
இந்திய மாநிலங்களிலேயே தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் நகரங் களைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இப்போது பெரும் பிரச்சனையாக உள்ளது. தமிழகத்திலும் குறிப்பாகச் சென்னையிலும் தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. போதிய மழையில்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டு, மக்களுக்கான குடிநீர் ஆதாரமும் வற்றியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் அதிக தண்ணீர் தட்டுப்பாடு கொண்ட நகரங்களுக்கான பட்டியலை மத்திய அரசு தயாரித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் உள்ள மொத்த நகரங்களில் சுமார் 17 சதவிகித நகரங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. மாநிலங்களைப் பொறுத்தவரையில் தமிழகத்தில்தான் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருக்கிறது.
தமிழகத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிகமான தண்ணீர் தட்டுப்பாட்டில் உள்ளன. தில்லியின் நான்கு நகராட்சிப் பகுதிகளிலும் தண்ணீர் பஞ்சம் இருக்கிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் விவசாயத்துக்கான நீர்ப்பாசனத்துக்கு நிலத்தடி நீர் அதிகமாகஉறிஞ்சி எடுக்கப்படுவதால் அங்குள்ள நகராட்சிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.தமிழகத்தைப் பொறுத்தவரையில், 27 மாவட்டங்களும், 184 நகர்ப்புற அமைப்புகளும் தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப் பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் 255 மாவட்டங்களும், 756 நகர்ப்புற அமைப்புகளும் தண்ணீர் பஞ்சத்தில் இருக்கின்றன.இந்தியாவில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க ஜல சக்தி அமைச்சகத்தின் கீழ் 255 மாவட்டங்களும், 1,597 நகரங் களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் தண்ணீர் சேமிப்பு, மறுசுழற்சி மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தச் சிறப்புத் திட்டம் ஒன்றை அரசு வகுத்துள்ளதாக தம்பட்டம் அடிக்கப்பட்டுள்ளது.