tamilnadu

img

வரலாறு காணாத நூல் விலை உயர்வு... ஜவுளித்தொழில் கடுமையாக பாதிப்பு... மத்திய, மாநில அரசுகள் தலையிட சிஐடியு வலியுறுத்தல்....

சென்னை:
வரலாறு காணாத நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய - மாநில அரசுகள் தலையிட வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்தில் விவசாயத்தொழிலுக்கு அடுத்தமுக்கிய ஆதார தொழிலாக இருப்பது  ஜவுளித்தொழிலாகும். பஞ்சாலைகள், நூற்பாலைகள், விசைத்தறி, பின்னலாடை மற்றும் சார்பு தொழில்களாக சலவை,டையிங், பிரிண்டிங், காம்பேட்டிங், பாரம்பரிய தொழிலான கைத்தறி நெசவுத்தொழில் என மாநிலம் முழுவதும் 50 லட்சம் பேர் ஜவுளித்தொழிலில் பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் பட்டினியால் பரிதவித்த நிலையும், பலர் தற்கொலை செய்து கொண்ட நிலையும்  ஏற்பட்டது.ஊரடங்கில் தளர்வு வந்த நிலையில் மக்களிடத்தில் பணப்புழக்கம் இல்லாமல் ஜவுளி விற்பனை மந்தமான நிலை உருவாகியுள்ளது. ஜவுளித்தொழிலை பாதுகாக்க மத்திய - மாநிலஅரசுகள் நிவாரண உதவி வழங்க முன்வராததால்,  ஆட்சியாளர்கள் மீது உரிமையாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.தொழிளர்கள் வருமானமின்றி வேதனையில் உள்ளனர். கொரோனா ஊரடங்கு பாதிப்புகளிலிருந்து மீளமுடியாத நிலையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமான மத்திய அரசின் செயல்பாட்டால் வரலாறு காணாத அளவுக்கு நூல் விலை  உயர்ந்து ஜவுளித்தொழில் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. இத்தொழிலை நம்பி வாழும் 50லட்சம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும், வருமானமும் கேள்விக்குறியாகி உள்ளது.  ஜவுளி ஆலைகளும் மூடப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்திய பருத்திக் கழகமானது பன்னாட்டுநிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதால் நூல் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது என ஜவுளி உற்பத்தியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் பல நூறாண்டு பழமையான பாரம்பரியமான கைத்தறி, நூற்பாலைகள், விசைத்தறி, பின்னலாடை மற்றும் சார்பு தொழில்கள் கிராமப்புற பின்னணியிலிருந்து வந்த தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பையும், நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்காற்றி வருகின்றன.மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற நடவடிக்கைகளால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள ஜவுளித் தொழிலானது கொரோனா ஊரடங்கும் பெருத்த பேரிடியாக விழுந்தது. தற்போது நூல் விலை கிலோவுக்கு ரூ.45 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது  தொடர்ந்து உயரும் ஆபத்தும் உள்ளது.

இந்திய பருத்திக் கழகம் தனது இருப்பை வட மாநிலங்களில் வைத்துள்ளதால் தமிழ்நாட்டு நூற்பாலைகளுக்கு போக்குவரத்து செலவு அதிகமாவதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கிடங்குவசதி ஏற்படுத்திட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சிஐடியுவலியுறுத்துகிறது.இத்தகைய தொழில் நெருக்கடிக்கு எதிராகஜவுளி உரிமையாளர்களும், தொழிலாளர்களும் இணைந்து  ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங் கள் என தொடர் போராட்டங்களை துவக்கி யுள்ளனர்.தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் உட்பட இதர மாவட்டங்களிலும் உள்ள ஜவுளித்தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில் நூல் விலை உயர்வை திரும்பப் பெற தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டுமென சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறது.