tamilnadu

img

எம்ஆர்எப் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

எம்ஆர்எப் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக  வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை, செப். 24- திருவொற்றியூர் விம்கோ பகுதியில் செயல்படும் எம்ஆர்எப் நிறுவனம் நாப்ஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறி நிர்வாகம் கடந்த 13ஆம் தேதி முதல் எந்த முன் அறிவிப்பும் செய்யாமல் தொழிலாளர்களை ஆலைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து தொழி லாளர்கள் ஆலை வாயில் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி உயர் நீதிமன்றம் தொழிலாளர்கள் ஆலை வாயில் முன் கூடுவதற்கு தடை ஆணை பிறப்பித்தது. இதனால் கடந்த 4 நாட்களாக தொழிலாளர்கள் விம்கோ நகரில் உள்ள சிஐடியு அலுவலகம் முன் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் வி.குப்புசாமி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் தினசரி போராட்டக் களத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஓசூரில் இருந்து தொழிற்சங்கத் தலை வர் ரூபன், ஹுண்டாய் தொழிற்சங்க செய லாளர் சின்னத்தம்பி தலைமையில் தொழி லாளர்கள் போராட்டக் களத்திற்கு வந்து ரூ.10ஆயிரத்தை போராட்ட நிதியாக அளித்தனர். இதற்கிடையே செவ்வாயன்று தொழி லாளர் நல ஆணையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. தொழிலாளர் நல ஆணைய அலுவலர் வேல்முருகன்  மருத்துவ காப்பீட்டு முன்பணத்தை வழங்குங்கள். பயிற்சியாளர் பணி நிரந்தரம், மற்றும் நாப்ஸ் குறித்து இருதரப்பும் பேசி முடிவெடுங்கள். ஆலையை திறந்து தொழிலாளர்களுக்கு வேலை வழங்குங்கள் என்று ஆலோசனை வழங்கியதை நிர்வாகம் ஏற்கவில்லை. உத்தரவாக பிறப்பிக்க நேரிடும் என தொழிலாளர் நல ஆணையம் எச்சரித்தும் நிர்வாகம் அதை ஏற்காததால் போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் போராடும் தொழி லாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர் சங்கம் விம்கோ கிளைத் தலைவர் கபூர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் செயலாளர் ஜெகதீஷ், கவுரவத் தலைவர் அன்பு, சிபிஎம் வடக்கு பகுதி செயலாளர் எஸ்.கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.