சென்னை:
சாத்தான்குளம் காவலர்களால் மிருகத்தனமாக சித்ரவதை செய்யப் பட்டு படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணசம்பவத்தில் குற்றமிழைத்த போலீசாரை காப்பாற்றும் நோக்கோடு அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிக்கைகளும் பேட்டிகளும் அளித்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சாத்தான்குளம் காவலர்களால் மிருகத்தனமாக சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருடைய மரணம் தமிழகத்தையே உலுக்கிக்கொண்டுள்ளது. எந்த குற்ற வழக்குகளிலும் சம்பந்தப்படாத அப்பாவி வியாபாரிகளை காவல்நிலையத்தில் அடித்துக்கொன்ற இச்சம்பவத்தில் குற்றம் புரிந்த காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைதுசெய்ய வேண்டும் என்கிற குரல்கள்தமிழகத்தில் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில்,
அந்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர், குற்றமிழைத்த போலீசாரை காப் பாற்றும் நோக்கோடு அறிக்கைகளும் பேட்டிகளும் அளித்துள்ளது வன்மையான கண்டத்திற்கு உரியதாகும்.
காவல்துறை எழுதிக் கொடுத்த அறிக்கையை அட்சரம் பிசகாமல்அப்படியே வெளியிடுவது ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல. அதற்கு ஒருபடி மேலே போய் அமைச்சர் கடம்பூர்ராஜூ, இது காவல் நிலையத்தில் நடந்தமரணமில்லை, சிறைச்சாலையில் தான் இறந்திருக்கிறார்கள், எனவே இது லாக்கப் மரணம் அல்ல என்றவிந்தையான வாதத்தை முன்வைத்திருக்கிறார்.
கைதுசெய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான் குளம் காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து கோவில்பட்டி கிளைச் சிறைச்சாலையில் அடைத்துள்ள நிலையில், அங்கு இருவரும் மரணமடைந்துள்ளது ஒரு தொடர் சம்பவமாகும்.இந்த படுகொலை விசாரணை வளையத்தில் சாத்தான்குளம் காவல்துறையினர், சாத்தான்குளம் மாஜிஸ்ட்ரேட், கோவில்பட்டி சிறைத்துறையினர் ஆகிய அனைவருக்கும் கூட்டுபொறுப்பு உண்டு. இவர்களில்பிரதானமான குற்றத்தை இழைத்தவர்கள் சாத்தான் குளம் காவல்துறையை சார்ந்தவர்கள். இங்கு சித்ரவதைசெய்து படுகாயமடைந்த இருவரையும் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்குசுமார் இரண்டு மணி நேரம் அவர் களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சை அளிக்கும்போது ஜெயராஜ் அவர்களின் வேட்டி, பென்னிக்ஸ் அவர்களின் பேண்ட் ஆகியவை முழுவதும் ரத்தத்தால் நனைந்து இரண்டுமூன்று முறை துணிகளை மாற்றி உள்ளனர். இதன் பின்னரே கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைத்துவைத்து அங்கு மரணமடைந்துள்ளனர்.
இரண்டு உயிர்கள் பலிவாங்கப் பட்டிருக்கிற இந்த பிரச்னையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ இந்த மரணத்திற்கு நியாயம் வழங்குவது பற்றிசிந்திக்காமல் இதை லாக்அப் மரணமா? சிறைச்சாலை மரணமா? என பட்டிமன்றம் நடத்துவது மிகுந்த வேதனையாக உள்ளது. இந்த மரணம் குறித்து கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் அவர்களை விசாரிக்க உத்தரவிட்ட மதுரை நீதிமன்றம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் உள்ள வீடியோ ஆதாரங்களையும் காவல்துறையினரையும் மற்ற விசாரணைகளோடு இணைத்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர்ராஜூ, சாத்தான்குளம் காவல் நிலையகுற்றமிழைத்த காவல்துறையினரை பாதுகாக்கும் வகையில் அறிக்கைஅளிப்பதானது நீதிபதி விசாரணையையும் அதனை தொடர்ந்து நடைபெற உள்ள புலன் விசாரணையையும் நாசப்படுத்திவிடும் என்று சுட்டிக்காட்டவிரும்புகிறோம்.
இரண்டு துணை ஆய்வாளர்கள் இடைநீக்கம், டாக்டர்கள் குழுவால் பிரேத பரிசோதனை, வீடியோ பதிவுபோன்ற நடவடிக்கைகள் கடம்பூர் ராஜூவின் கருணையினால் நடைபெறவில்லை. தேசிய மனித உரிமை ஆணையமும் உச்சநீதிமன்றமும் கொடுத்திருக்கக் கூடிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் கண்டிப்பாகசெய்யப்பட வேண்டியவை. பொதுவாக காவல்துறையினர் குற்றம் சாட்டப்படும் வழக்குகளில், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது மிகவும் கடினமான பணியாக மாறிப் போகிறது என்பதால், 2006இல்பிரகாஷ் சிங் எதிர் இந்திய யூனியன் என்கிற வழக்கில் உச்சநீதிமன்றம் காவல்துறையினர் மீதான புகார்களை விசாரிக்க தனியான ஒரு அமைப்பு (Police Complaints Authority - PCA) மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. 13 ஆண்டுகள் கழித்து 2019 நவம்பரில் தான் தமிழகத்தில் இதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டதாக கூறப் படுகிறது. அதன்பிறகும் மாநில, மாவட்ட மட்டங்களில் இப்படிப்பட்ட அமைப்பை ஏற்படுத்தியதாக தகவல் கள் இல்லை. அதற்கு முதலில் தமிழகஅரசு பதில் சொல்ல வேண்டும்.
இந்தியாவில் 2017 ஏப்ரல் - 2018 பிப்ரவரி காலகட்டத்தில் 76 கஸ்டடி மரணம்சம்பவங்களோடு முதலிடத்தில் தமிழகம்தான் உள்ளது என மனித உரிமைக்கான ஆசிய மையம் தெரிவிக்கிறது.இச்சூழலில் குற்றம் புரிந்த காவலர்களை பாதுகாக்க தமிழக அரசு எடுக் கும் முயற்சிகளை கண்டிப்பதோடு, இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட சாத்தான் குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் இச்சம்பவத்தின் போது பணியில் இருந்த காவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் குற்றவாளிக் கூண் டில் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க முன்வர வேண்டும்.எனவே, இத்தகைய காவல் நிலைய, சிறைச்சாலை மரணங்கள் மற்றும் காவல்துறையினரின் அத்துமீறல்கள் இவைகளை எதிர்த்து நீண்டநெடிய போராட்டத்தினை நடத்தி சம் பந்தப்பட்ட குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்த பெருமைமிகு வரலாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சிக்கு உண்டு.அமைச்சர் கடம்பூர் ராஜூவைப் போலவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆட்சியில் உள்ளவர்கள் குற்றமிழைத்தவர்களுக்காக வாதாடினார்கள் என்பதே தமிழகத்தின் துயரமான வரலாறாகும். இத்தகைய முயற்சிகளைதவிடுபொடியாக்கி நீதிக்கான பாதையில் நிச்சயம் பயணிக்கும், அதில் கண்டிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமுன் வரிசையில் நிற்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கைவிடுக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும், பொதுமக்களும் நியாயம் கிடைக்கும்வரை களத்தில் நிற்க வேண்டுமெனஇத்தருணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.