சென்னை:
தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் போக்குவரத்தினை மேம்படுத்த ஆயிரத்து 50 பாலங்கள் கட்டுவதற்காக 147 கோடிரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கடந்த 8ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 700 குறு பாலங்கள், 250 சிறு பாலங்கள், 100 தரைப்பாலங்கள் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக தமிழகத்தில் கட்டப்பட உள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாலங்கள் கட்டுவதற்கான வேலையாட்களுக்கான ஊதியத்தினை மத்திய அரசு வழங்கும் எனவும், கட்டுமானப் பொருட்களுக்கு ஆகும் செலவில் 75 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கும் என்றும், தமிழக அரசு 25 சதவீத நிதியை ஒதுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஆயிரத்து 50 பாலங்கள் கட்ட ஒதுக்கப்பட்டுள்ள ரூ.146 கோடியே 78 லட்சத்தில், 114 கோடியே 12 லட்ச ரூபாய் மத்திய அரசு வழங்கும். 32 கோடியே 66 லட்சம் ரூபாயை மாநில அரசும் வழங்கும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.