tamilnadu

img

வாக்களிக்க வந்தவர்கள் திரும்பி செல்ல பேருந்து இல்லாமல் அவதி

சிதம்பரம், ஏப்.22-தமிழகத்தில் கடந்த 18 ஆம் தேதிமக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற்றது. 100 சதவீத வாக்கை வலியுறுத்தி தேர்தல்ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. வாக்களிப்பதற்கு வசதியாகஅரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வேலைகளுக்கு சென்றவர்கள் வாக்களிப்பதற்கு சொந்த ஊருக்கு வருவதற்கு போதிய பேருந்து வசதிகள் செய்துகொடுக்கவில்லை. இதனால் வாக்களிக்க முடியாமல் போய்விடுமோ என்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் பல மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்த சம்பவமும் நடந்தது.பின்னர் குறைந்த அளவில் இயக்கப்பட்ட பேருந்தின் கூறை மீது அமர்ந்து ஆபாத்தான நிலையில் பயணத்தை மேற்கொண்டு சொந்த ஊர்களுக்கு வந்தடைந்தனர்.


கடலூர் மாவட்டம் சிதம்பரம், கடலூர், விருத்தாச்சலம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு வந்து வாக்களித்து விட்டு திரும்ப பணிக்கு செல்லுவதற்காக அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற போது அதிர்ச்சியே காத்திருந்தது. பேருந்து நிலையங்களில் கட்டுக்கடங்கா கூட்டம் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்லும் பயணிகள்பகல், இரவு பாராமல் காத்திருக்கிறார்கள். இருக்கும் குறைந்த அளவு பேருந்துகளை கொண்டு பயணிகளை அனுப்பி வருகிறார்கள். இந்த நிலைமை திங்களன்றும் நீடித்தது. பேருந்து நிலையங்களில் கூட்டம் அலை மோதியதால் நகரப் பேருந்துகளை சென்னை, சேலம் உள்ளிட்ட தாமிழகத்தின் பல பகுதிகளுக்கு மாற்றி விட்டும் பலன் தரவில்லை. 


இது குறித்து காட்டுமன்னார்கோவில் பகுதியில் இருந்துசென்னைக்கு செல்லும் பயணிஒருவர் கூறுகையில்,“ காட்டுமன்னார் கோவிலிலிருந்து சென்னைக்கு செல்ல கூட்டம் அலைமோதியதால் சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு வந்தேன். இங்கு அதைவிட கூட்டம் அதிகமாக உள்ளது. இதுபோன்ற நேரங்களில் அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது” என்றர்.அரசு போக்குவரத்து அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “ பகல்நேரத்தில் கூட்டம் வருவதை சமாளித்து இருக்கும் பேருந்துகளைக் கொண்டு அனுப்பி வருகிறோம். இரவு நேரத்தில் சொல்லமுடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம்வருகிறது. இருக்கும் பேருந்துகளை புறநகர், கிராமப்புற பேருந்துகளை மாற்றி அனுப்பி வருகிறோம்.புறநகர், கிராமப்புற பேருந்துகளை மாற்றிவிடுவதால் அந்த பயணிகள் பாதிக்கபடுவது எங்களுக்கும் தெரிகிறது. மேலிட உத்தரவால் செய்யவேண்டிய நிலையில் உள்ளோம். இதுகுறித்து எதுவும் கேட்க வேண்டாம்” என்று முடித்துக்கொண்டார்.