சீத்தாராம் யெச்சூரியின் மறைவு, உழைக்கும் மக்கள் அனைவருக்கும் பேரிழப்பு என விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கதில் கூறியதாவது:
"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவரது மறைவு இடதுசாரிகளுக்கு மட்டுமல்ல; உழைக்கும் மக்கள் அனைவருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும்.
இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத் தக்கதாகும். விடுதலைச் சிறுத்தைகளுடன் மிகவும் நெருக்கமான - இணக்கமான தோழமையைப் போற்றியவர். எமது வெல்லும் சனநாயகம் மாநாட்டில் பங்கேற்று எமக்குப் பெருமை சேர்த்தவர். அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். "
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.