tamilnadu

img

தினமலரை மிரள வைக்கும் `ஒன்றியம்' எனும் சொல்!

"ஒன்றியத்தில் ஒளிந்திருக்கிறதா பிரிவினை சிந்தனை?" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறது தினமலர். அந்த வார்த்தையை மோசமானதாக, பயன்படுத்தக் கூடாத,  அச்சத்திற்கும், ஆபத்துக்கும் உரிய வார்த்தையாக கட்டமைப்பதற்கு படாதபாடு பட்டுள்ளது. அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதன் நியாயத்தை எந்த வகையிலும் மறுக்க முடியாது என்று நன்றாகத் தெரிந்தும், பொருத்தமில்லாத காரணங்களை சொல்லி அந்த வார்த்தையை நிராகரிக்க துடியாய் துடித்துள்ளது.

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று அரசமைப்பு சட்டத்திலேயே குறிப்பிடப்பட்டு உள்ளதையும் சொல்லிவிட்டு, அதை வேறு வகையில் வியாக்யானம் செய்யவும் எத்தனித்துள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அரபு அமீரகம், சோவியத் யூனியன் என பல நாடுகளின் பெயர்களில் ஆங்கிலத்தில் "யுனைடெட், யூனியன்" என இருக்கும் இரு வார்த்தைகளை தமிழில் "ஒன்றியம்" என்ற ஒரே சொல்லில் அர்த்தப்படுத்துகிறது. சோவியத் யூனியன் பிளவுபட்ட வரலாற்று நிகழ்வைச் சொல்லி இங்கே பூச்சாண்டி காட்டப் பார்க்கிறது.

ஒன்றிய அரசு என்று சொல்வதன் மூலம் "தனி தேசியமான நான், அதாவது தமிழ்நாடு விருப்பப்பட்டு, ஒரு சவுகரியத்துக்காக உன்னோடு, அதாவது இந்தியாவோடு இருக்கிறேன்", என்று சொல்வதாகவும், இதில் பிரிவினை சிந்தனையின் வித்து உள்ளதாகவும் கூறியிருக்கிறது. இது தேசிய சிந்தனையையும், தேச நலனுமே பெரிதென்று கருதும் தமிழ்நாட்டில் அதன் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் சொல்லாக இருக்கிறதாம்!

தமிழகம் தேசநலன் பெரிதென்று கருதுவது உண்மைதான். இங்கே பிரிவினை சிந்தனையை மக்கள் கவனமாக நிராகரித்தே வந்துள்ளனர் என்பது அழுத்தமான வரலாற்று உண்மை. அதே சமயம் தனது மொழி, பண்பாடு, ஜனநாயகம், சமூகநீதி பாரம்பரியத்துக்கு எதிரான ஒற்றை தன்மை கொண்ட மேலாதிக்க அரசியலையும் கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக திட்டவட்டமாக, தெளிவாக நிராகரித்து வந்துள்ளதும் மறுக்க முடியாத உண்மை. 

எனவே தினமலர் சொல்லக்கூடிய "தேசிய சிந்தனை" என்பது மேலாதிக்க ஒற்றைத் திணிப்பு என மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கின்றனர். இந்தியத் தேசியம் என்பது "வேற்றுமையில் ஒற்றுமை" என்பதை அடித்தளமாகக் கொண்டது. அதாவது பல தேசியங்களைக் கொண்ட தேசியம் ஆகும். ஆனால் இவர்கள் சொல்லும் "தேசிய சிந்தனை" இந்தியாவின் பன்மைத்துவத்தை நிராகரிப்பதாக இருக்கிறது.

"இது ஒற்றை இந்தியா. ஒரு மித்த இந்தியா. ஒரு தாய் மக்கள். பல மாநிலங்கள் இருக்கலாம். ஆனால் இது ஒரு நாடு. பல மொழிகள் பேசலாம், பல இனங்கள் வாழலாம். ஆனால் இது ஒரு தேசம்.  இந்த "ஒரு தேசம்" என்ற சிந்தனையை இளைஞர்கள் மனதில் இருந்து முளையிலேயே கிள்ளியெறியவே, ஒன்றியம் என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது". இவ்வாறு தனக்குள் உள்ளடங்கி இருக்கும் சிந்தனையை வெளிப்படுத்துகிறது தினமலர். 

மேலே இருக்கும் பாராவை மறுபடியும் ஒரு முறை படித்துப் பாருங்கள். பல மாநிலங்கள் இருக்கலாம்...., பல மொழிகள் பேசலாம்....., பல இனங்கள் வாழலாம்....., ஆனால் இது ஒரு தேசமாம். இதில் தான் அவர்களது மேலாதிக்கமான, அலட்சியமான, எதேச்சதிகாரமான ஒற்றைப் பார்வை இருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு எதிரானதாகும். பல மாநிலங்கள், பல மொழிகள், பல இனங்கள் இருக்கலாம் என்பதல்ல, இருக்கின்றன என்பது திட்டவட்டமான, மறுக்க முடியாத தெளிவான எதார்த்த நிலை. ஆனால் "இருக்கலாம், பேசலாம், வாழலாம்" என்று குறிப்பிட்டு, ஏதோ இவர்கள் கருணை அடிப்படையில் பிச்சை போட்டதுபோல் குறிப்பிட்டு இருப்பதில்தான் ஜனநாயகத்தை மறுக்கும், பன்மையை மறுக்கும் ஒற்றைச் சிந்தனை வெளிப்படுகிறது. ஒன்றியம் என்ற சொல் இவர்களது இந்த சிந்தனையை இளைஞர்கள் மனதில் திணிக்க விடாமல் தடுக்கிறது என்பதுதான் அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. அதைத்தான் கொட்டித் தீர்க்கிறது தினமலர்.

இவர்கள் சொல்லும் தேசிய சிந்தனை பழம்பஞ்சாங்கமானது, பிற்போக்கானது. இந்து, இந்தி, இந்தியா என்று ஒற்றைத் தன்மையை ஆதாரமாகக் கொண்டு முன்வைக்கப்படும் தேசியமாகும். ஆனால் இந்திய ஒன்றியம் என்பது மதசார்பற்ற, ஜனநாயக, கூட்டாட்சி குடியரசு என்ற நவீன கட்டமைப்பை குறிக்கக்கூடியதாகும். இது இந்திய விடுதலைப் போராட்டத்தின் மூலம் உருவான பன்மைத்துவம் கொண்ட விழுமியமாகும்.

வார்த்தை என்ன செய்துவிடும் என்று சும்மா இருந்துவிட வேண்டாம் என்று தேசிய சிந்தனையாளர்கள் எச்சரிக்கிறார்களாம். ஆம் உண்மைதான். தினமலருக்கு வார்த்தை பயன்பாடு பற்றி நன்றாகத் தெரியும். எனவேதான் ஒவ்வொரு செய்தியிலும், ஒவ்வொரு வார்த்தையிலும் தனது நுட்பமான சூது மிக்க, குதர்க்கமான தன்மையை வெளிப்படுத்தி நவீன இந்தியா என்ற கண்ணோட்டத்துக்கு எதிராக, தனது வாசகர்களுக்குத் தொடர்ந்து விஷம் ஊட்டிக் கொண்டிருக்கிறது. ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும். உண்மைதான் தினமலரின் வார்த்தை கொல்லும், இந்திய ஒன்றியம் எனும் வார்த்தை வெல்லும்!

வே.தூயவன்