tamilnadu

பொன்பரப்பி சம்பவம் வேதனைக்குரியது: அதிமுக அறிக்கை

சென்னை,ஏப்.21 பொன்பரப்பி, பொன்னமராவதி சம்பவங்கள் வேதனைக்குரியவை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக ஏற்பட்ட இந்த இரு சம்பவங்களும் வேதனைக்குரிய ஒன்றாகும். இவ்விரு மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையின் கீழ் சம்பந்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த தலைவர்களை அரசு அதிகாரிகள் தொடர்புகொண்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையும் எடுத்து வரும் நடவடிக்கைகள் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருகிறது. அமைதி காக்க அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும்முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், இச்சம்பவங்களுக்கு காரணமான அனைவர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்வதாகவும் அதில் அவர்கள்மேலும் தெரிவித்துள்ளனர்.