அகன்று நீண்டதோர் பெரிய
ஆர்மோனியப் பெட்டி போல்
அந்த சமாதி .
தோழமை விரல்கள் அதை
தொடுகையில்
ஆர்மோனியத்தின் மேல்
விரல்கள் நர்த்தனமிடும்
விம்மித அனுபவம்.
ஒவ்வொருத்திக்குமான
ஒவ்வொருவனுக்குமான
கானம் அந்த
கல்லறையில் இருக்கிறது.
மயிலிறகுகளால் சமைக்கப்பட்ட
மனம் அந்த
மயானத்தில் துயிலும்
மனம்....
ஆதலின் அந்த
கல்லறைப் பரப்பில் எம்
கைகள் படரும் போது
தோகை விரிக்கையில் எழும்
தொனியை.... ஒலியை....
எமது இதயத் துடிப்பும்
எய்துகிறது.
முகடுகளைப் பிரதிபலிக்கும் ஒரு
முஷ்டியின் கீதம்
கல்லறையில் இருந்து
கசிவதையும் செவியுறலாம்.
முகாரி வாழ்க்கையை
மோகனமாய் மாற்ற
இசைத்த வீணை ,அவன்
இதய வீணை.
மருத்துவத்துக்கு தன்
ரத்தம் தந்தவன்.
மார்க்சியத்துக்கு தன்
சித்தம் தந்தவன்.
மன்னர்களுக்கு
மணிமுடியாய் இருப்பதை விட
வறியவர்களுக்கு
மிதியடியாய் இருப்பதையே
மேன்மையாய் நினைத்தவன்.
தாகித் தோருக்கு
ஜலமாய் இருந்தவன்.
சமூகத் தேருக்கு
வடமாய் இருந்தவன்.
அழுக்குச் சேரியை
சலவை செய்தவன்.
அந்தகாரத்தில்
ஒளியைப் பெய்தவன்.
இளமையின் வெள்ளம்
அவனது வதனம்.
எளிமையின் இல்லம்
அவனது இதயம்.
அபலையின் கண்ணீர்
துடைக்கும் அவன் கரம்.
அவனது நிழலும்
சிவப்புச் செந்நிறம்.
ஆதிக்கத்தின் மேல் எறியப்படும்
அம்புகளுக்கு
கூர்முனையாய் இருந்தவன்.
வாலிப வயல்களை உழும்
ஏர்முனையாய் இருந்தவன்.
காட்டாற்று வெள்ளம்
வாலிபம்.... அதற்கு
கரை போட்டு
சீரான திசையில் செலுத்தியவன் .
கணவனைப் பறிகொடுத்த
மீனவக் குடும்பம்
கரைசேர இவன்
கட்டுமரம் ஆனவன்.
அகத்தில் இருக்கும்
செகுவேரா அவன்
பனியனில் ஊடுருவி
படமாய் வெளிப்படுவார்.
வாதம் பீடித்த தேகம்
வதைபடும் இம்சையை விட
மதவாதம் பீடித்த தேசம்
சிதைவுறும் இம்சையே பெரிது.
மதவாதத்தின் எதிரி ; அவன்
மார்க்சியம் பரப்பிட
வாதம் புரிவதில் வல்லவன்.
சாமி விழாக்களில்
தண்ணீர்ப் பந்தல்
சமைத்தவன்...
காதலிக்கு
கைக்குட்டை வாங்கும்
காளைப் பருவத்தில் அவன்
கற்பதற்கு புத்தகம் வாங்கியவன்.
அவனது வேர்
சேரியில் இருந்தாலும்
அவனது கிளைகள்
ஊரத் தாண்டி நாட்டைத் தாண்டி
உலக உருண்டை மேல்
நிழல் விரிக்கும் விருட்சமாய்
நீண்டு வளர்ந்தது.
அவனது தொடுவானம்
சேரியை ஊரை
சேர்த்துக் கவிந்தது.
ஆம் தோழரே!
கடல்களைத் தாண்டி
காரல்மார்க்சின்
கல்லறையையும்,
லெனினின்
கண்ணாடிச்சமாதியையும்
அவன்
தொடுவான்விளிம்பு
தொடுகிறது.
==நவகவி==
ஜூலை 12 (இன்று)
நெல்லை மண்ணில் அணிதிரள்வோம்