சென்னை, ஏப். 18-சென்னை புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவைச் சேர்ந்தவர் தி.செசிலி மோரல் (74). இவர் அந்த பகுதியில் உள்ள புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு வியாழக்கிழமை காலை சென்றார். அவர் வாக்குச் சாவடிக்குள் சென்றதும், அங்கிருந்த ஊழியர்கள் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரி பார்த்துள்ளனர்.ஆனால் வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாது என ஊழியர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த செசிலி மோரல், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஊழியர்கள், அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு வந்த செசிலி, நேராக தனது படுக்கை அறைக்குச் சென்று படுத்தாராம். சிறிது நேரத்திற்கு பின்னர் அவரது மகன் அமுதன், செசிலியை எழுப்ப முயன்றார். ஆனால் அவர் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே அருகில் இருந்த ஒரு மருத்துவரை அழைத்து வந்து காட்டியுள்ளார்.செசிலியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே மாரடைப்பால் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. செசிலி மோரல் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் அகரமாகும். அவர் சென்னைக்கு குடியேறி 60 ஆண்டுகளாகிறது. ஏற்கெனவே அவர், உயர் அழுத்த ரத்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளது காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.