புதுச்சேரி, ஏப். 5-
புதுச்சேரி அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் 17வது மக்களவை தேர்தலுக்கான கோரிக்கைகள் சாசனம்வெளியிடும் நிகழ்ச்சி முதலியார்பேட்டையில் வியாழனன்று(ஏப்.4) நடைபெற்றது.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன், புதுச்சேரி பிரதேச தலைவர் சந்திரா, செயலாளர் சத்யா, இணைச்செயலாளர் இளவரசி, இந்திய மாதர் தேசிய சம்மேளன நிர்வாகிகள் அமுதா, ஹேமலதா,சமம் இயக்கம் பொதுச்செயலாளர் சிவகாமி, உதவும் கரங்களின் தலைவர் ஹெலீஸ் தாமஸ், உள்ளிட்டோர் கலந்து கொண்டுமக்களவை தேர்தலுக்கான கோரிக்கைகள் சாசனத்தை வெளியிட்டனர்.கோரிக்கை சாசனத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிர்பயா நீதியை வழங்க ஆவணம் செய்ய வேண்டும். புதுவை -கடலூர் ரயில் சேவையை துரிதமாக செய்ய வேண்டும். திருக்கனூரில் மகளிர் காவல் நிலையம் கொண்டுவர வேண்டும். புதுவையில் மதுபான கடைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் பாலியல், பாலின சமத்துவம் பற்றிய பாடத்திட்டத்தை உருவாக்கி போதிக்க வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக் கீட்டைஉறுதி செய்யும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.அனைத்து துறை வேலைவாய்ப்புகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். சமவேலைக்கு சம ஊதிய சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். இதனை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும். கல்வி நிறுவனங்களின் போட்டித் தேர்வு முறைகள் நீக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து துறைகளிலும் 8 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். மீனவப் பெண்கள் தொழிலாளர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 43 கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.இந்த கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை மக்களவை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களை சந்தித்து வழங்க உள்ளதாகக் கூறினர்.