தேனி, ஏப். 6-தேனி நாடாளுமன்ற தொகுதி மதச்சார்பற்றமுற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவனை ஆதரித்து கம்பத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் அவர் பேசியதாவது:மாநிலங்கள் விரும்பினால் நீட்தேர்வை வைத்துக்கொள்ளலாம், விரும்பவில்லை என்றால் நீட்தேர்வு கிடையாது என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லி கோடான கோடி தமிழக மாணவர்களுக்கு புதுவாழ்வை அறிவித்திருக்கிறது. அதுபோல்காங்கிரஸ் அறிவித்துள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 25 கோடி மக்களுக்கு ஆண்டொன்றுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் குறைந்த பட்ச வருமான உறுதியளிப்புத் திட்டம்தான் உலகத்திலே மிகச்சிறந்த சமுதாய நலத்திட்டம். இந்தியா சுதந்திரம் பெற்றபோது 90 சதவீதமாக இருந்த வறுமை நேரு, இந்திரா போன்றவர்களால் 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. உலகத்தில் எந்த கண்டத்திலும் இது நடக்கவில்லை. காங்கிஸ் ஆட்சியில் 100நாள் வேலைவாய்ப்புத்திட்டம் கொண்டுவந்தது ஒரு வரலாற்றுப்புரட்சி. “மதச்சார்பற்ற” என இந்த கூட்டணிக்கு பெயர் வைத்ததிலும் காரணம் உண்டு. தான் ஒரு இந்து என்றும் ராமபக்தன் என்றும் தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டவர் மகாத்மா காந்தி. ஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்ததும், இந்தியா இந்து நாடாக மாறுமா என்று அவரிடம் கேட்டபோது, எனக்கு கடவுள் நம்பிக்கையும் உண்டு, மத நம்பிக்கையும் உண்டு. ஆனால் எனது நம்பிக்கையை அடுத்தவரிடம் புகுத்த மாட்டேன். பாரதிய ஜனதா ஆட்சி எல்லா துறைகளிலும்தோல்வியடைந்த ஒரு அரசியல் இயக்கம். மக்களைப் பிரிக்கிற அரசியல் இயக்கம். ராமபிரான் காந்தி கையில் இருந்தவரைஇந்தியா ஒற்றுமையாக இருந்தது. இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். ஆனால் அதே ராமபிரான் பாஜக கைக்கு போனபின்பு அயோத்தியில் மசூதியும், வடகிழக்கு மாநிலங்களில் தேவாலயங்களும் இடிக்கப்படுகிறது. தலித்துகள் நசுக்கப்படுகிறார்கள். மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்திய அரசியல் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக அனைவரும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.