tamilnadu

img

சிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்திடுக!

சென்னை:
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும்  மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தொழில் வளத்தில் மிகவும் பின்தங்கியுள்ள சிவகங்கை மாவட்டம் இன்றும் விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ளது. மாவட்டத்தில் வைகை,தேனாறு, பாலாறு, விருசுழி ஆறு, மணிமுத்தாறுஆறு, சருகணி ஆறு ஆகிய சிற்றாறுகளில் அவ்வப்போது வரும் நீர் விவசாயத்திற்கு பயன்படுகிறது. இந்நிலையில் இந்த ஆறுகளிலும், விளைநிலங்களிலும் மணல் கொள்ளை தொடர்ந்து நடைபெறுகிறது. திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை தாலுகாக்களுக்கு உட்பட்ட 20 கிராமங்களில்  தற்போது வரை மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. 

மாவட்டத்திலுள்ள விளைநிலங்களில் உபரிமண் என்ற பெயரில் சவுடு மற்றும் மணல் 3 அடிஆழத்திற்கு மண் எடுப்பதற்கு அனுமதி வாங்கிவிட்டு, சில இடங்களில் 30 அடி ஆழத்திற்கும்,சில இடங்களில் 50 அடி ஆழத்திற்கும் எடுக்கப்படுகிறது. இம்மணல் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், கண்மாய்களுக்கு மழைநீர் வருவதும்தடைபடுகிறது. இதன் மீது மாவட்ட  நிர்வாகமோ, கனிமவளத் துறையோ, காவல்துறையோ நடவடிக்கை எடுப்பதில்லை. 

மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், சம்பந்தப்பட்ட கிராமங்களின் பொதுமக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.  இதனால்மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களும், ஊழியர்களும்,  சம்பந்தப்பட்ட கிராமத்தில் உள்ள பொதுமக்களும் மணல் கொள்ளையினரால் தொடர்ந்துமிரட்டப்படுகின்றனர்.  தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்த மணல் கொள்ளைக்கு அரசியல் செல்வாக்கு உள்ளவர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் உடந்தையாக உள்ளனர். ஏற்கெனவே கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் வாழ்வாதாரம் இன்றி வாழ்க்கை நடத்தவே சிரமப்படுகிற சூழ்நிலையில், இந்த மணல் கொள்ளையின் மூலம் நீராதாரமின்றி அல்லல்படும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும் அபாயமிருக்கிறது. எனவே, தாங்கள் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு மணல் கொள்ளையில் ஈடுபட்டிருக்கிற, அதற்கு ஆதரவாக இருக்கிற நபர்கள்யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கைஎடுத்து உரிய தண்டனை கிடைக்க ஏற்பாடு செய்வதுடன், மணல் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்தி சிவகங்கை மாவட்ட மண் வளத்தையும், நீராதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.