tamilnadu

img

தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக... அரசு ஊழியர் கோரிக்கைகளுக்கு சுமூகத் தீர்வு காண்க.... தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்....

சென்னை:
நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்கள் மீது தாக்குதல்நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை அழைத்து பேசி சுமூகத் தீர்வுகாணவும் வற்புறுத்தி, தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.  

அவரது கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசுத்துறையில் உள்ள 4.50 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், அவுட்சோர்சிங் முறையை ஊக்குவித்து நிரந்தரப் பணிகளை இல்லாமல் ஆக்கி இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிப்பது உள்ளிட்ட ஆதிசேஷய்யா கமிஷனின் பரிந்துரைகளை நிராகரித்தல், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்குதல், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்குதல், சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம் ஆகியவற்றை ஒழித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தை வழங்குதல், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றுதல், முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் விடுப்புஉள்ளிட்ட உரிமைகளை பெறுதல் போன்றகோரிக்கைகளுக்காக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஜாக்டோ  - ஜியோ கூட்டமைப்பினர் தொடர்ந்து போராடிவருகின்றனர். 
அதன் ஒரு பகுதியாக 19.2.2021 அன்று பெருந்திரள் முறையீட்டுக்காக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் சென்னையில் குவிந்தனர்.  தங்களை நேரில் சந்தித்துகோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்பதுதான் அவர்களது நோக்கம். ஆனால் அரசு தரப்பில் அவர்களை அழைத்து பேசுவதற்கு பதிலாக, பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தடியடிப் பிரயோகம் செய்ததில் பெண் ஊழியர் உள்பட 7 பேர் படுகாயமுற்று மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியச் சூழல் ஏற்பட்டது. இன்னும் பலர் காயமடைந்துள்ளனர். சிலருக்கு எலும்பு முறிவும் ஏற்படும் அளவுக்கு தடியடி நடத்தப்பட்டுள்ளது. 

போராட்டம் என்கிற ஜனநாயகச் செயல்பாட்டில் இறங்கியவர்கள் மீதுகாவல்துறையினர் இத்தகைய வன்தாக்குதல் நடத்தியது மிகவும் மோசமான நடவடிக்கையாகும். அரசின் அங்கமாக உள்ள அரசு ஊழியர்கள் மீதே அரசின் அணுகுமுறை இது என்றால், இதர சாதாரண உழைப்பாளி மக்கள் மீது அரசின் அணுகுமுறையினை விளக்க வேண்டியதில்லை. இம்மனித உரிமை மீறலுக்கு காரணமான காவலர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஏன் போராட்டக் களத்துக்கு வருகின்றனர் என்பதை அரசு எண்ணிப் பார்க்க வேண்டும். செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்த போது சட்டமன்றத்தில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் புதிய ஓய்வூதியத் திட்ட ரத்து பற்றி அமைக்கப்பட்ட ஸ்ரீதர் குழு, ஊதிய முரண்பாடுகளை களைவதுசம்பந்தப்பட்ட சித்திக் குழு அறிக்கைகள் இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை. ஊழியர்களின் பல கட்ட போராட்டங்களின் போது அழைத்தும் பேசவில்லை. இந்தநிலையில் தான் பெருந்திரள் முறையீடுநடத்தப்பட்டது. எனவே, இதனை கவுரவப்பிரச்சனையாக பார்க்காமல் தமிழக அரசுஅவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும் எனவும் கேட்டு கொள்கிறோம் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.