குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளார். கேரளத்தைப்போல் தமிழகத்தை போல் நாடு முழுவதும் அனைவரும் ஒன்றுதிரளும் கரு உருவாகியுள்ளது. இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள் ஏந்தியுள்ள தீ, நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் தலைமையிலான அமைப்புகளின் மதவெறி அரசியலுக்கு வைக்கப்படும் தீயாக இருக்கும். தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை பல்கலைக் கழகத்திற்குள் புகுந்து தாக்கியுள்ளனர். அதனையும் மீறி மாணவர்கள் களத்தில் உள்ளனர். மாணவர்களுக்கு பக்கபலமாக அனைத்து கட்சிகளும் துணை நிற்கும்.தமிழகத்தில் அடிமை ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கும் சட்டத்தை அதிமுக ஆதரித்து இருப்பதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கே அதிமுக துரோகம் செய்துள்ளது. தமிழகத்திலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அனுமதிக்கக்கூடாது. தமிழகத்தில் அடக்குமுறை தொடருமானால் அதிமுக ஆட்சியை முற்றுகையிடுவோம். செய் அல்லது செத்துமடி என்று காந்தி சொன்னதுபோல், பாஜகவிற்கு எதிராக செய் அல்லது செத்துமடி என்ற அந்த உறுதியோடு களம்காண்போம்.