நடப்பு ஆண்டு முதல் 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த திருத்தத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணைகூறுகிறது. தமிழகத்தில் கல்வி பராமரிப்பு மேற்கொள்வது தமிழக அரசின் கடமையாகும். இதை மறுத்துவிட்டு மத்திய அரசின் அரசாணையை தமிழக நிலைமைக்கு புறம்பாக அமல்படுத்துவது தமிழக குழந்தைகளை பெரிதும் வஞ்சிப்பதாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கம் குழந்தைகள் அச்சம், அதிர்ச்சி மற்றும் பதற்றம்இல்லாமல் குழந்தை பருவத்தில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான்.கல்வி கற்கும் குழந்தைகளின் கற்றல் திறன் வெளிப்பாட்டை அறிந்திட பல்வேறு குழந்தை நேய வழிமுறைகள் உள்ளபோது மிகவும்பழமையான தேர்வு முறையை தமிழ்நாடு அரசுபின்பற்ற முயற்சி செய்வது மிகவும் வருந்தத்தக்கது.
நோக்கத்திற்கே எதிரானது
பத்து மற்றும் பதிமூன்று வயதில் ஒரு குழந்தை தனக்கு பழக்கமான சூழலில் தனக்குநன்கு அறிமுகமான நபர்களிடம் தான் அச்சமும்பதற்றமும் இல்லாமல் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளும். தேர்வு மையம், அறிமுகமில்லாத ஆசிரியர் ஆகிய சூழல் குழந்தையை நிச்சயம் பதற்றம் அடையச் செய்யும். இது குழந்தை கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கத்திற்கே எதிரானது“வழக்கமான” தேர்விற்கும், “வாரிய” தேர்விற்கும் உள்ள வேறுபாட்டை உணரவேண்டும். வழக்கமான தேர்வு வகுப்பறையில்சம்பந்தப்பட்ட ஆசிரியரே நடத்தலாம். வாரியத்தேர்வு தான் பொதுத் தேர்வு. பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு நடத்தும் பொதுத் தேர்வைத் தான் வாரியத் தேர்வு என்பதாகும். ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு இத்தகைய பொதுத் தேர்வினை அமல்படுத்துவது குழந்தைகள் மத்தியில் அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்குவதற்கும் தேவையற்ற குழப்பங்களை குழந்தைகள் அடைவதற்குமே வழிவகுக்கும்.
இப்போதைக்கு இத்தேர்வுகளில் தேர்ச்சி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் இத்தகைய பொதுத் தேர்வு முறையின் மூலம் பல குழந்தைகளை தோல்வியடையச் செய்து பள்ளிப் படிப்பிலிருந்து வெளியேற்றுவதற்கே வழி ஏற்படுத்தும்.குறிப்பாக, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள், பெண் குழந்தைகள் இத்திட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இத்தகைய காரணங்களினாலேயே பத்தாம் வகுப்பு வரைதேர்வுகள் இல்லாத முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது.எனவே, தமிழ் சமூகத்தின் எதிர்கால மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு தடைகல்லாக அமைந்துள்ள 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வு முறையினை கைவிட வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். நாளைய தலைமுறையின் நலனை கணக்கில் கொண்டு தமிழகஅரசின் இத்தேர்வு முறையினை எதிர்த்து மாணவர்களும், இளைஞர்களும், அனைத்துப் பகுதி மக்களும் கண்டனக் குரலெழுப்பிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.