சென்னை, ஏப். 26- சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. சமீப காலமாக தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக தபால் கார்டு, ஸ்டாம்ப் ஆகியவற்றின் புழக்கம் குறைந்து வருகிறது. குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினருக்கு தபால் கார்டு, ஸ்டாம்ப் குறித்தே தெரியவில்லை. தபால் கார்டு எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், ஸ்டாம்ப் சேகரித்தல் குறித்தும் அஞ்சல் துறை சார்பில் இந்தியாவிலேயே முதன்முறையாக கடந்த ஆண்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பயிற்சி முகாம் சென்னை தலைமை தபால் அஞ்சல் நிலையத்தில் துவக்கி நடத்தப்பட்டது. இதையடுத்து பிறமாநிலங்களிலும் இந்த பயிற்சி முகாம்கள் மேற்கொள்ளப்பட்டன.அதேபோல் இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாம் ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை ஆறு பிரிவுகளாக நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் 25 மாணவர்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் என மூன்று நாட்கள் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை பயிற்சியளிக்கப்படுகிறது. இந்த முகாமில் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.இதில் முதல் நாள் தபால் தலைகள் மூலம் அறிந்துகொள்ளக் கூடிய பொது அறிவு விவரங்கள் மற்றும் தபால் தலைகள் சேகரித்தல் பற்றிய வகுப்புகள் நடைபெறும். 2வது கடிதம் எழுதும் முறைகள், பிரபலங்கள் எழுதிய புகழ்பெற்ற கடிதங்கள் மற்றும் தபால் பெட்டியில் தொடங்கி சம்பந்தப்பட்ட முகவரியை சென்றடைவது வரையிலான ஒரு கடிதத்தின் பயணம் போன்ற தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நடைபெறும். 3ஆவது நாள் அஞ்சல் அலுவலகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் நடைபெறும் பணிகள் பற்றிய செயல்முறை விளக்கங்கள் மாணவர்களுக்கு அளிக்கப்படும். இந்த முகாமில் மாணவர்களுக்கு கடிதம் எழுதும் போட்டியும், கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள தபால் தலையை கண்டுபிடிக்கும் போட்டியும் நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். முகாமில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.