சென்னை, ஜூன் 12 தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட வுள்ளன. இந்த வருடம் 8 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் புதிய பாடத் திட்டங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடையாள அட்டையை ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிக்கிழமை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி குழந்தைகளுக்கு வழங்குகிறார். இந்த அடையாள அட்டையில் மாணவர்கள் பற்றிய முழு விவரங்கள் இடம்பெறுகின்றன. மாற்றுச் சான்றிதழில் உள்ள முக்கிய தகவல்கள் ஸ்மார்ட் கார்டில் அச்சடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு பள்ளிக்கல்வித் துறை சார்பில் வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த ஸ்மார்ட் கார்டில் பல்வேறு சிறப்புகள் அமைந்துள்ளன. மாணவரின் பெயர், தந்தை பெயர், தனித்துவ அடையாள அட்டை எண், பள்ளியின் பெயர், மாணவரின் முகவரி, பிறந்த தேதி, புகைப்படம் ஆகியவை இடம் பெறு கிறது. இது தவிர ‘‘கியூ-ஆர் கோடு’’ என்று சொல்லக்கூடிய நவீன தொழில் நுட்பமும் இதில் இடம்பெறுகிறது. கியூ-ஆர் கோடினை ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கேன் செய்து மாணவர்கள் பற்றிய முழு விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.