சென்னை,டிச.3- பெஞ்சால் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். வங்கக் கடலில் உருவான பெஞ்சால் புயலால் விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட மரக்காணம், விக்கிரவாண்டி, விழுப்புரம் பகுதிகளை திங்கள்கிழமை நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், வெள்ள பாதிப்பு நிவாரண நிதி கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இதுவரை கண்டிராத அளவில் பெஞ்சால் புயல் சூறையாடி உள்ளது. 65 லட்சம் குடும்பங்கள் மற்றும் 1.5 கோடி பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புயலால் ஏற்பட்ட சேதங்க ளைச் சீரமைக்க இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 2,475 கோடி தேவைப்படுகிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஒன்றிய அரசின் குழு பேரிடர் பாதிப்பில் இருந்து தமிழகத்தை மீட்க ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். “மாநில அரசு இந்த சேதங்களின் ஆரம்ப மதிப்பீட்டை மேற்கொண்டது. தற்காலிக மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு 2,475 கோடி ரூபாய் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொண்ட போதிலும், இந்த பேரழிவு மாநிலத்தின் வளங்களை மூழ்கடித்துள்ளது. மேலும் இந்த இயற்கை பேரழிவின் வீழ்ச்சியை நிர்வகிக்க அவசர நிதி உதவி தேவை, ”என்று ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மோடி, வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.