tamilnadu

கிண்டியில் சிறப்பு கண்காணிப்பு மையம்.... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்....

சென்னை:
கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து மீண்டெழுந்தவர்களை தொடர்ந்து கண்காணிப்பதற்காக சிறப்பு மையம் சென்னை கிண்டி கிங் ஆய்வகத்தில் அமைக்கப்படுகிறது. இந்த சிறப்பு மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூலை 1 ஆம் தேதி திறந்து வைக்கிறார்.கொரோனாவிலிருந்து மீண்டவர்களும் பல்வேறு பின்விளைவுகளால் பாதிக்கப்படுகிறார்கள். 97 சதவீதம் பேர் வரை முழுமையாக குணம் அடையவில்லை. உடல் வலி, சோர்வு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பல்வேறு உபாதைகளால் அவதிப்படுகிறார்கள்.

மேலும் பக்கவாதம், மாரடைப்பு, ரத்தநாளங்களில் கட்டி உருவாகுதல் போன்ற ஆபத்தான நோய்களும் ஏற்படுகிறது. பலருக்கு நீரிழிவு, நுரையீரல் சுவாச பிரச்சனை போன்ற நாட்பட்ட வியாதிகளும் வருகின்றன. இந்த மாதிரி பாதிக்கப்படுபவர்களுக்கு நீண்டகால சிகிச்சையும், கண்காணிப்பும், தேவைப்படும். இதற்காக தமிழக அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

கொரோனாவில் இருந்து மீண்டவர்களும் பல்வேறு நோய் களுக்கு உட்படுவதால் அவர் களை கண்காணிக்கவும், கவனிக்கவும் சிறப்பு மையங்களை ஏற்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் ஒரு சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 1ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறார்.இதேபோல் அனைத்து மாவட்ட மருத்துவமனைகள், கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு மையம் அமைக்கப்படுகிறது. இந்த சிகிச்சை மையங்களில் அனைத்து விதமான நோய் களுக்கான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இருப்பார்கள்.அவர்கள் நோயாளிகளை பரிசோதித்து ஆலோசனை வழங்குவார்கள். மேலும் சிகிச்சை தேவைப்படுவோருக்கு தேவையான சிகிச்சைகளும் வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.