tamilnadu

img

சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், எஸ்.பி. கண்ணனை கைது செய்திடுக... சென்னையில் டிஜிபி அலுவலகத்தை பெண்கள் ஆவேச முற்றுகை.....

சென்னை:
பெண் மாவட்ட கண்காணிப்பாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் ஆகியோரை கைது செய்யக் கோரி வியாழனன்று (மார்ச் 4) சென்னையில் உள்ள டிஜிபிஅலுவலகத்தை மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சென்னையில் உள்ள டிஜிபி-யிடம் புகார் அளிக்க பெண் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் காரில் வந்து கொண்டிருந்தார். அவரை பரனூர் சுங்கச்சாவடி அருகே தடுத்து நிறுத்தி புகார் கொடுக்கக்கூடாது என செங்கல்பட்டு எஸ்பி கண்ணன்மிரட்டியுள்ளார். இதனையும் மீறி ராஜேஷ்தாஸ், கண்ணன் ஆகியோர் மீது பெண் எஸ்பி புகார் அளித்தார். இதனையடுத்து ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

இதனை ஏற்க மறுத்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், பிப்ரவரி 27 ஆம் தேதி டிஜிபி அலுவலகத்தில்  “சிறப்புடிஜிபி ராஜேஷ்தாஸ், எஸ்பி கண்ணன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று வலியுறுத்தி மனு அளித்தனர்.  இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பேரில் ராஜேஷ்தாஸ், கண்ணன் ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் பிப்ரவரி 2 அன்று கோவை எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக வியாழனன்று (பிப்.4) டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பெண் எஸ்.பி.க்கு பாதுகாப்பு வழங்கிடுக!
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, “தமிழகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் ஆயாம்மா வரைக்கும் பாதுகாப்பில்லை. ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல்தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ்தாஸ், உறுதுணையாக இருந்த கண்ணன் ஆகியோர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 5 நாட்களாகியும் கைது செய்யாமல் உள்ளனர். ஆகவே, அவர்களை பணியிடை நீக்கம் செய்து, உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்றார்.“குற்றவாளிகள் வெளியே இருந்தால் சாட்சிகளாக உள்ள காவலர்கள், ஓட்டுநர்கள் உயரதிகாரிக்கு எதிராக எப்படி சாட்சியம் அளிப்பார்கள்? குற்றவாளிகளை கைது செய்யாமல் இருப்பதே, சாட்சிகளை கலைத்துவழக்கை ஒன்றுமில்லாமல் செய்வதற்கான ஏற்பாடு” என்று குற்றம் சாட்டிய அவர், “காவல்துறையில் உள்ள ஏராளமான பெண் அதிகாரிகள், காவலர்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி உள்ளனர். இதுகுறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய உள்ளோம்.பெண் காவலர்களுக்கு பணியிட பாதுகாப்பு உத்தரவாதம் செய்யும் வரை போராடுவோம். பாதிக்கப்பட்டுள்ள பெண் எஸ்பிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.

நிரந்தர பாலியல் புகார் கமிட்டி
“காவல்துறையில் பாலியல் குற்றச்சாட்டு வரும்போது, தற்காலிகமாக புகார் கமிட்டி அமைக்கப்படுகிறது. ஐஜி முருகன் வழக்கிலும் ஒரு கமிட்டி அமைத்தார்கள். தற்போது ஒரு கமிட்டி அமைத்துள்ளார்கள். பணியிடங்களில் பாலியல் வன்முறை தடுப்பு சட்டப்படி நிரந்தர புகார் கமிட்டிகள் அமைக்க வேண்டும். இல்லாவிடில் அந்த துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல் துறையிலேயே நிரந்தர புகார் கமிட்டி இல்லை. எனவே, காவல் துறையில் நிரந்தர பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

“இந்த பாலியல் வழக்கு தொடர்பாக பிப்ரவரி 2 அன்று கோவையில் போராட்டம் நடத்திய மாதர் சங்கத்தினர் 54 பேர் மீது  வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா பரவல், தேர்தல் விதிமுறை மீறல் என வழக்குபதிந்துள்ளனர். தேர்தல் நேரம் என்பதற்காக இதுபோன்று வன்முறை சம்பவங்கள் நிகழாமல் உள்ளதா? மாதர் சங்கம் போராட்டம் நடத்திய முதல்நாள் பாஜக தலைவர் ஒருவர்500 பெண்களை வைத்து ஊர்வலம் நடத்தினார். அவர்மீது ஏன் வழக்கு பதியவில்லை?” என சுகந்தி கேள்வி எழுப்பினார்.
“உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்துள்ளது. விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும்கூறியுள்ளது. இந்த வழக்கை நீதிமன்றம் எடுத்து 6 நாட்களாகிறது. எப்ஐஆர்-படி குற்றவாளிகளை கைது செய்திருக்க வேண்டுமில்லையா? ஒரு வாரக் காலத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். காலதாமதம் ஏற்படுமானால் சாட்சிகள் கலைக்கப்படுவார்கள்.எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விசாரணையை முடித்து, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்” என்றும் சுகந்தி கேட்டுக் கொண்டார்.

பேச்சுவார்த்தை
இதனையடுத்து டிஜிபி திரிபாதியை சந்தித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச்செயலாளர் பி.சுகந்தி, மத்தியக்குழு உறுப்பினர் வ.பிரமிளா, மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் வி.தனலட்சுமி ஆகியோர்  பேசினர்.இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாலண்டினா, “குற்றவாளிகளை பணியிடை நீக்கம் செய்து, ஒருவாரக் காலத்தில்விசாரணை நடத்தி, ஒருமாதக் காலத்திற்குள் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளோம். குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகடிஜிபி உறுதி அளித்துள்ளார். காவல்துறையில் நிரந்தர பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை ஆய்வு செய்வதாக கூறினர். குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

இப்போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.சரவணசெல்வி, ம.சித்ரகலா, ஜூலியட்(தென்சென்னை), சாந்தி, உஷா (மத்தியசென்னை), பாக்கியம், கோட்டீஸ்வரி (வடசென்னை), மோகனா (திருவள்ளூர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.