சென்னை:
உதவி பேராசிரியர் பணிக்கு பி.எச்.டி. முடித்தவர்கள்தான் விண்ணப்பிக்க முடியும் என்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மாநில அரசு நடத்தும் ‘செட் தேர்வு மற்றும் தேசிய தேர்வு முகமை நடத்தும் ‘நெட் தேர்வு’ ஆகியவற்றில் தகுதி பெற்றவர்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
பல்கலைக் கழக நிதி நல்கைக்குழுவின் வழிகாட்டுதலின்படி (யூஜிசி) அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ‘செட்’ மற்றும் ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களும், பி.எச்.டி. ஆய்வுப்படிப்பை முடித்தவர்களும் உதவிப்பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். உயர்கல்வித்துறை பல்கலைக்கழகங்கள் மூலமாக நடத்தி வந்த ‘செட்’ தகுதித் தேர்வை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தவில்லை.
இந்த நிலையில் வரும் ஜூலை 1 முதல் பி.எச்.டி. ஆய்வுப்படிப்பை முடித்தவர்கள் மட்டுமே கல்லூரி மற்றும் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெறுவார்கள் என்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை அரசாணை பிறப்பித்து இருக் கின்றது.பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு நிர்ணயித்துள்ள விதிகளின் கீழ் இந்த அரசாணை வெளியிடப்பட்டு இருப்பதாக உயர்கல்வித்துறை கூறி இருக்கின்றது.பி.எச்.டி. முடித்தால்தான் உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவே முடியும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருப்பது அநீதியாகும். கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, பழங்குடி இன மாணவர்கள் உயர்கல்வித் துறைக்கு பணி வாய்ப்புப் பெற்று வந்துவிடக் கூடாது என்ற வன்மம் நிறைந்த ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் சனாதனக் கூட்டத்தின் குறிக்கோள் களை தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெறச் செய்திருக்கிறது பா.ஜ.க. அரசு. அதன் அடிப்படையில்தான் யூ.ஜி.சி. சமூக நீதிக்கு எதிரான இத்தகைய விதிமுறைகளை வகுத்திருக்கின்றது. அதையே காரணம் காட்டி, தமிழக அரசு இந்த அரசாணையைப் பிறப்பித்து உள்ளது. சமூக நீதியைப் பறிக்கும் இந்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.