சென்னை:
1 முதல் 12 ஆம் வகுப்பு வரையான பாடத்திட்டங்கள் கணிசமாக குறைக்கும் பணிகள் முடிவு பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கான வகுப்புகள் ஆன்லைன் வாயிலாகவும், தொலைக்காட்சி கள் மூலமும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பல்வேறு மாநிலங்களும் பாடத்திட்டங்கள் குறைப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் 16 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவை அண்மையில் தமிழக அரசு அமைத்தது. இதையடுத்து 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் கணிசமாக குறைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.இந்நிலையில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் கணிசமாக குறைக்கும் பணிகள் முடிவு பெற்றுள்ளதாகவும் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் நடப்பு கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.