tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கோயம்பேடு  மார்க்கெட்டுக்கு நாளை விடுமுறை

சென்னை, மே 3- வணிகர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 5-ந்தேதி வணிகர் தினத்தையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள அனைத்து காய்கறி கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. மே 5 அன்று கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள 2 ஆயிரம் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர். அதே நேரத்தில் கோயம்பேடு பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட்டில் உள்ள ஒரு சில சங்கங்கள் வணிகர் தினத்தன்று விடுமுறை அளிக்கவில்லை. இதனால் பூ மார்க்கெட் மற்றும் பழ மார்க்கெட்டில் சில கடைகள் திறந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆர்பிஎஃப் காவலரை தாக்கிய  3 இளைஞர்கள் கைது

சென்னை, மே3- தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலரை தாக்கிய 3 இளைஞர்களை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் கைது செய்தனர். தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில், பொதுமக்களிடம் 3 இளைஞர்கள் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட ஆர்பிஎஃப் காவலர், அங்கு சென்று அவர்களை விலக்கி விட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், காவலரை தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து, ரயில்வே காவல் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த 3 இளைஞர்களை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

 4 ரவுடிகள் கைது  

சென்னை, மே 3-  வியாசர்பாடி அருகே குடிபோதையில் 4 பேர் பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும், கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்பதாகவும் எம்கேபி நகர் காவல்துறையினருக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில் வெள்ளியன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த 4 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், வியாசர்பாடி பி.வி.காலனி 31வது தெருவை சேர்ந்த பிரஜன் (19), சிவக்குமார் (19), கார்த்திக்  (24), ஆண்ட்ரூஸ் (25) என்பதும், இவர்கள் மீது ஏற்கெனவே சில குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மற்றொரு சம்பவம்: வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்தவர் தீபன் (34). இவர் மீது வியாசர்பாடி காவல் நிலையத்தில் சில குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற குற்ற வழக்கில் இவர் கடந்த வருடம் அக்டோபர்  முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன்படி, போலீசார் தீபன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தனியார் பள்ளி பேருந்துகள் சரியாக உள்ளனவா? அதிகாரிகள் ஆய்வு!

காஞ்சிபுரம், மே 3- திருபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகள் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பேருந்துகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வடமங்கலம் தனியார் கல்லூரி மைதானத்தில் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. திருபெரம்பத்தூ சார் ஆட்சியர் மிருணாளினி, டி.எஸ்.பி., கீர்த்திவாசன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜ் ஆகியோர் ஆய்வில் கலந்து கொண்டனர். மோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோரும் பேருந்துகளில் ஏறி ஆய்வு செய்தனர். வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டால் ஓட்டுநர்கள் எப்படி சமாளிப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் இதற்கான விளக்கத்தை அளித்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணன் பள்ளிப் பேருந்தை இயக்கி சோதனை செய்தார். ஆய்வில்  வேக கட்டுப்பாடு கருவி,  ரிவர்ஸ் கேமரா மற்றும் அவசரகால கதவு வேலை செய்யாத பேருந்துகள்  நிராகரிக்கப்பட்டன.

எஸ்.ஐ பணியிடங்கள் காலி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை, மே 3- தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 எஸ்.ஐ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 10-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் காவல் சார்பு ஆய்வாளர்(தாலுகா) 933, ஆயுதப்படையில் 366 காவல் ஆய்வாளர் (எஸ்.ஐ.) காலியிடங்கள் என 1,299 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் www.tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படித்து தெரிந்து கொள்ளலாம்.  இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமையன்று (மே 3) கடைசி நாள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது விண்ணபிக்க கால அவகாசம் வரும் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறும் சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.

திருங்கையர் தினவிழா...

திருவள்ளூர் மாவட்டம், ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் வெள்ளியன்று (மே 2) திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சமூகநலத் துறை சார்பில் இணைந்து நடத்திய பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, நடனப்போட்டி, மற்றும் அழகி போட்டி போன்ற போட்டிகளில் வெற்றிப் பெற்ற திருநங்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர்  மு.பிரதாப், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

சென்னையில் இறங்கிய பெங்களூரு விமானங்கள்

சென்னை, மே 3- பெங்களூருவில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத 4 விமானங்கள் சென்னையில் வந்து தரையிறங்கின. அதேபோல், மேலும் 2 விமானங்கள் திருப்பதிக்கு சென்று தரை இறங்கின. பெங்களூருவில் வெள்ளியன்று மாலை திடீரென பலத்த சூறைக்காற்றுடன் மழை கொட்டியது. இதனால் மோசமான வானிலை நிலவியதால், பெங்களூருவில் தரையிறங்க முடியாமல் 6 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அதேபோல், 2 தில்லி விமானங்கள், பெங்களூருவில் தரையிறங்க முடியாமல், திருப்பதிக்கு சென்று தரை இறங்கின. பெங்களூருவில் வானிலை சீரடைந்த பின்பு இந்த விமானங்கள் மீண்டும், சென்னை மற்றும் திருப்பதியில் இருந்து பெங்களூரு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே, பயணிகள் அனைவரும் அந்தந்த விமானங்களிலேயே அமர வைக்கப்பட்டனர்.

மின்சாரம் தாக்கி தையல் தொழிலாளி பலி

சென்னை, மே 3-  தண்டையார்பேட்டை நெடுஞ்செழியன் நகர் அழகிரி தெருவை சேர்ந்தவர் வைரமுத்து (39). இவர் கடந்த 5 ஆண்டுகளாக அதே பகுதியில் கருணா நிதி நகர் 1ஆவது தெருவை சேர்ந்த முகமது நிஜாம் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் தையல் கலைஞராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சந்திரமதி (37). இவர்களுக்கு 15 வயதில் மகனும் 13 வயதில் மகளும் உள்ளனர்.  இந்நிலையில் வெள்ளிக்கிழமை வைரமுத்து நிறுவனத்தில் அமர்ந்து தையல் இயந்திரத்தில் துணிகளை தைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த 5 தையல் இயந்திரங்களில் மின்சாரம் பாய்ந்தது. இதில் வைரமுத்து மீது மின்சாரம் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்த மற்ற தையல் கலைஞர்கள் 4 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். உடனே அருகில் இருந்தவர்கள் வைரமுத்துவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.  இதையடுத்து அவரது உடல் பிரேத பரி சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து ஆர்.கே.நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு

வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி சிபிஎம், மமக,எஸ்டிபிஐ  உள்ளிட்ட கட்சிகள் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், இடைக்கழி நாடு பேரூராட்சி அலுவலகம் முன்பாக சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ரவி தலைமையில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, செய்யூர் வட்ட செயலாளர் க.புருஷோத்தமன் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் எஸ்.எம்.ஷாஜகான் உள்ளிட்ட பலர் பேசினர்.