tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஏரியில் மூழ்கி எஸ்ஐ மகன் உயிரிழப்பு அம்பத்தூர்,

மே 22- புழல் ஏரியில் குளித்த போது, தண்ணீரில் மூழ்கி காவல் உதவி ஆய்வாளர் மகன் உயிரிழந்தார். ஆவடி அருகே திருமுல்லைவாயல், சாந்திபுரத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ் (59). இவர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் உதவி  ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அபிலேஷ் (31). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் புதன்கிழமை அபிலேஷ், அவரது நண்பர் விக்னேஷ், (31) என்பவருடன் திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள புழல் ஏரியில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அபிலேஷ் திடீரென ஏரி தண்ணீரில் மூழ்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  நண்பர் விக்னேஷ் தீயணைப்பு துறை, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து இரவு வரை தேடியும் அபிலேஷை மீட்க முடியவில்லை. இந்த நிலையில், வியாழக்கிழமை அபிலேஷின் உடல் புழல் ஏரி பகுதியான ஜெயராம் நகரில் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த திருமுல்லைவாயல் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அபிலேஷ் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்னிந்தியாவில்  முதன்முறையாக  மூல நோய்க்கு நவீன சிகிச்சை

 சென்னை, மே 22- மூல நோயால் பாதிக்கப்பட்டுள்ள பலர் அறுவை சிகிச்சையைத் தவிர்க்கும் சூழலில், ரஃபேலோ செயல்முறை மூலம்  ரேடியோ அலை அகற்றலை அடிப்படையாகக் கொண்டு குறைந்தபட்ச அறுவை சிகிச்சையை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் வாணி விஜய்  இம் மருத்துவமனையுடன் இணைந்து, உட்புற மூல நோய்க்கான இந்த சிகிச்சையை அறிமுகப்படுத்தியுள்ளனர். குறைந்த பட்ச மயக்கமருந்து, குறைவான அசௌகரியம், விரைவாக குணமடைதல் ஆகியவை இந்த சிகிச்சையின் சிறப்பம்சங்கள் ஆகும். இப்புதிய ரஃபேலோ சிகிச்சை சுமார் 15-20 நிமிடங்களில் முடிவடைகிறது,  இதனால் மாலையில் நோயாளி வீடு திரும்பலாம் என்பதால் மருத்துவமனையில் பல நாட்கள் தங்கவேண்டியதில்லை. இதனால் மருத்துவமனைக்கு ஆகும் செலவும் குறையும் என்று   டாக்டர் வாணி விஜய் கூறினார்.

4 ரேஷன் கடைகள் திறப்பு

திருவொற்றியூர், மே 22- ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்  பேட்டை இளைய முதலி தெரு, மீனம்பாள் நகர் ஆகிய பகுதிகளில் புதிதாக ரேசன் கடைகள் கட்டி தரக்கோரி வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 4 நியாய விலை கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. மீனாம்பாள் நகர், இளைய முதலி தெரு ஆகிய பகுதிகளில் ரூ.65 லட்சம் செலவில் புதிதாக 4 ரேசன் கடைகள் கட்டி முடிக்கப் பட்டன. இதை கலாநிதி வீராசாமி எம்பி புதனன்று திறந்து வைத்தார்

.தொடர் குற்றச் சம்பவங்களை தடுக்க நவீன சிசிடிவி கேமராக்கள்

திருப்போரூர், மே 22-  திருப்போரூர் புறவழிச்சாலையில் தொடர் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில், நவீன சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்போரூர் ஓ.எம்.ஆர். சாலை பகுதியில் நிலவும் போக்கு வரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, கால வாக்கத்தில் இருந்து ஆலத்தூர் வரை சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு புற வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த, புறவழிச்சாலையின் பணிகள் 100 விழுக்காடு முடிவடைந்து விட்ட தால், தற்போது போக்குவரத்து தொடங்கி யுள்ளது. இதன் காரணமாக, 24 மணி நேரமும் கனரக வாகனங்கள், கல்லூரி வாக னங்கள், வேன், கார்கள் என அனைத்து வாகனங்களும் இந்த புறவழிச்சாலை வழியாக செல்கின்றன. இது மட்டுமின்றி கேளம்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம், கல்பாக்கம் நோக்கி நேரடியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த சாலை வழியாக செல்கின்றன. இதன் காரணமாக, பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடமாக இச்சாலை மாறி வருகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இச்சாலையில் தனியாக மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் பொதுமக்களை தடுத்து நிறுத்தி செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இச்சம்பவங்களில் ஈடுபட்ட 3 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இருப்பினும், இந்த சாலையில் பயணிக்கும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்ட திருப்போரூர் காவல்துறை சார்பில் புறவழிச்சாலையில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரவிலும் அடையாளம் தெரியும் வகையில், இந்த கேமராக்கள் நான்கு திசைகளிலும் காட்சிகளை பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த, கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை காவல் நிலைய ஆய்வாளரின் செல்போனில் இருந்து பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும் என காவல் துறையினர் தெரி வித்தனர்.

சென்னையில் விளம்பரப் பலகைகள் அமைக்க ஆன்லைனில் அனுமதி துவங்கியது

சென்னை, மே 22- சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு நிகழ்நிலையில் (ஆன்லைன்) அனுமதி வழங்கும் நடவடிக்கை புதனன்று (மே 21) முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் நிறுவுவதற்கு மாநகராட்சியின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒப்புதல் வழங்குவதில் தேவை யான ஆவணங்களை நேரடியாக அலுவ லகம் வந்து சமர்ப்பிக்கும் நடைமுறை இருந்தது. இந்த முறையினை மாற்றி வெளிப் படைத் தன்மையாகவும், திறனோடும், எளிதாகவும் அனுமதி வழங்குவதற்கு ஏது வாக நிகழ்நிலையில் அனுமதி வழங்கும் நடவடிக்கை புதன்கிழமை முதல் நடை முறைப்படுத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை உரிய ஆவணங்களோடு சென்னை மாநகராட்சி யின் இணையதளத்தில் (www.chennai corporation.gov.in) பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தின் நிலையினை அறிந்து கொள்ளலாம். இந்த முறையில் எளிமையாகவும், காலதாமதமின்றியும் ஒப்புதல் வழங்கு வதற்கும், அனுமதியின்றி வைக்கப் பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் ரூ.1,000 அபராதம்

சென்னை, மே 22- தெற்கு ரயில்வேயின் கீழ் நாள் தோறும் 350-க்கும் மேற்பட்ட ரயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. சென்னை கோட்டத்தில் மின்சார ரயில் சேவையும் இயக்கப்படு கிறது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு நீண்ட தூரத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதி வில்லா பெட்டி கள் இணைத்து இயக்கப்படுகிறது. இவ்வாறு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் சிலர் ஆபத்தை உணராமல் சாகச பயணம் செய்கின்றனர். சில நேரங்களில் இது உயிரிழப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இது போன்ற சாகச பயணத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து ரெயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் அதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தாலோ அல்லது படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொண்டாலோ ரூ.1,000 அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்சார ரயிலில் பிரேக் பழுதானதால் பயணிகள் திண்டாட்டம்

தாம்பரம், மே 22-  தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் திடீரென்று ஏற்பட்ட பிரேக் பழுதால் பயணி கள் கடும் அவதிக்குள்ளாகினர். தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், புதனன்று காலை வழக்கம் போல தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் பயணிகளுடன் சென்னை கடற்கரை நோக்கி சென்று கொண்டி ருந்தது. பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளுடன் மின்சார ரயில் புறப்பட இருந்த நிலையில், ரயிலின் பிரேக் பகுதியில் பழுது ஏற்பட்டு மின்சார ரயிலின் 6வது பெட்டியில் இருந்து புகை வெளியேறியதைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இன்றும் நாளையும்  1800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை, மே 22-  அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: மே 23  (வெள்ளிக்கிழமை) முகூர்த்த நாள், மே 24ம் தேதி (சனி) மற்றும்  25(ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்க ளிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்பதால் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்ப கோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்  கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்  கிழமை) 570 பேருந்துகளும், சனிக்கிழமை 605 பேருந்துகளும் இயக்க திட்ட மிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திரு வண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளியன்று 100 பேருந்துகளும், சனிக்கிழமையன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாத வரத்திலிருந்து வெள்ளியளன்று  24 பேருந்துகளும், சனிக்கிழமையன்று 100 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகிறது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.