tamilnadu

img

செங்கல்பட்டு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு : 2 ஆசிரியர்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு

சென்னை:
செங்கல்பட்டு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை  அளித்த வழக்கில் 2 ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்றுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 2011 - 2013 ஆம் ஆண்டில் பிளஸ்-1, பிளஸ்-2 பயின்ற மாணவிகளுக்கு வேதியியல் ஆசிரியர் நாகராஜ், இயற்பியல் ஆசிரியர் புகழேந்தி ஆகியோர் பாலியல் சீண்டல்செய்து வந்துள்ளனர். இது குறித்து  மாணவிகள் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் 21. 1. 2011 அன்று புகார் மனு அளித்தனர். அன்றையதினமே கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை செய்து அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்தனர்.

தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை குற்ற எண் 39/ 2013வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐபிசி 354 ,பாக்சோசட்டம் 7, 8,9,10,4 - women’s ஹரஸ்மெண்ட் சட்டப் பிரிவுகளின் கீழ் செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு எண் 1/ 2013 கீழ் சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 6 .3. 2018 அன்று மேற்படி நபர்கள் குற்றவாளிகள் அல்ல என்று தீர்ப்புக் கூறியது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

20.2. 2020 அன்று அவ்விரு ஆசிரியர்களும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தது. பிப்ரவரி25 செவ்வாயன்று  மேற்படி குற்றவாளி நாகராஜ் என்பவருக்கு ஐந்து வருடம் சிறைத் தண்டனையும் 24 ஆயிரம் ரூபாய் அபராதமும் புகழேந்திஎன்பவருக்கு மூன்று வருடங்கள் சிறை தண்டனையும் நான்காயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த வழக்கில்ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கமும் பல்வேறுஇயக்கங்களை நடத்தியது. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு மிரட்டல்கள், பண பேரம், கட்டப்பஞ்சாயத்துக்கள் போன்றவைகளை  பாதிக்கப்பட்ட மாணவிகள் சந்தித்தாலும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டுமென்று ஏழு வருடங்கள் உறுதியோடு நின்று சாட்சியமளித்த மாணவிகளையும் அவரது பெற்றோர் களையும்  பாராட்டுகிறோம்.

கீழ் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட இவ்வழக்கை உரிய முறையில் பரிசீலனை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியநீதிபதி பி.வேல்முருகன் அவர்களை பாராட்டுகிறோம். வழக்கை உரிய முறையில் வாதாடி வெற்றியை பெற்றுத் தந்த வழக்கறிஞர்கள் காரல் மார்க்ஸ், முனுச்செல்வம் ஆகியோரது பணி பாராட்டுக்குரியது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில மையம் தொடர்ந்துஇவ்வழக்கில் வழிகாட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

பாலியல் தொல்லை குறித்தும்அதிகாரிகள் ஆய்வு செய்திடுக! 
தமிழகத்தில் தொடர்ந்து பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பான இடம் என கருதப்படும் பள்ளி ,கல்வி நிலையங்கள், விடுதிகள், வீடுகள் போன்ற இடங்களிலேயே பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகும். 

இச்சூழலில் இரண்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு பலருக்கு பாடமாக இருக்கும் என கருதுகிறோம். எனவே தமிழக அரசு தொடர்ந்து போக்சோ சட்டம் குறித்துபள்ளிகளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற் கொள்ள வேண்டும். பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும்போது கல்வித்தரம் மட்டுமேஅளவுகோலாக பார்க்காமல் குழந்தைகளுக்கு நடைபெறும் இது போன்ற பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகள் தமக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான தொந்தரவுகளை வெளிப்படுத்துவதற்கான புகார் பெட்டிகள் வைக்கவேண்டும்.மாணவிகள் பாலியல்  வன்முறைகள் நடந்தால் வெளியில் கூற முன் வரும் போது உரிய பாதுகாப்பு  அளித்திட வேண்டும்.போக்சோ சட்டம் கூறியுள்ளபடி உரிய காலத்தில் தீர்ப்புகள் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.