சென்னை:
விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் 25 ஆம்தேதி நடைபெறும் தேசம் தழுவிய போராட்டத்தில் மாணவர்கள் பெரும்திரளாக பங்கேற்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச்செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்திய தேசத்தின் முதுகெலும்பான விவசாயத்தை அடியோடு அழித்தொழிக்கும் வகையில், விவசாயிகளை கார்ப்பரேட் முதலாளிகளின் அடிமைகளாக மாற்றும் வகையில் மத்திய பாஜக அரசு மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாயத்திற்கு விரோதமான இச்சட்டங்களை திரும்பப் பெறக்கோரி செப்டம்பர் 25 ஆம் தேதி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தேசம் தழுவிய போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.விவசாயி களையும், விவசாயத்தையும் பாதுகாக்க நடைபெறவுள்ள இந்த தேசபக்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கமும்ஆதரவு தெரிவித்து அனைத்து பகுதிகளிலும் பெரும் திரளான மாணவர்களோடு பங்கேற்கும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.