tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

தண்டவாளத்தில் பள்ளிவேன்  கவிழ்ந்து விபத்து :10 பேர் காயம்

கடலூர், ஆக. 25- விருத்தாசலம் அருகே மாணவர்களை ஏற்றி சென்ற  பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு  சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இருந்து மாணவர்கள்  தனியார் வேன் ஏற்றிக் கொண்டு கோ.பூவனூர் என்ற இடத்தில் தண்ட வாளத்தை கடக்கும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த  பள்ளி மாண வர்கள் அஸ்வின், வசந்த், ஜெகதீஷ், அஸ்விகா, அனந்திகா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாணவர்கள்  காயம் அடைந்த நிலையில் அப்பகுதி மக்கள் உடனடி யாக காப்பாற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கோ.பூவனூர் கிரா மத்தில் மேற்கொண்ட விசாரணையில் வேன் டிரைவரின் அலட்சியப் போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது. பள்ளி மாணவர்களை ஏற்றி வரும்பொழுது மெதுவாக செல்லாமல் அதி வேகத்தில் அந்த வளைவில் வளைந்து தண்ட வளத்தை கடக்கும் பொழுது வேகத்தடை யில் ஏறி தண்டவாளத்தின் மேல் வரும் பொழுது வேன் கவிழ்ந்ததாக தெரிய வந்தது. இதனை அடுத்து ரயில்வே போலீசார் வேன் ஓட்டுநர் விஜயமாநகரத்தை சேர்ந்த சேகர் என்பவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சேகரிடம் தொடர்ந்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் டி.கே.எம். கல்லூரியில்   சிறப்பு கல்விக்கடன் முகாம்

வேலூர், ஆக.25 - தமிழ்நாட்டில் உள்ள தொழில்நுட்பம், மருத்துவம், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள், 10, 12ஆம்  வகுப்பு முடித்து மேற்படிப்பு தொடரமுடியாமல் உள்ள மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் இருந்து வரும் நடைமுறை சிக்கல்களை களைந்து கல்விக்கடன் பெறுவதில் கல்விக்கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து வங்கி அலுவலர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து சிறப்பு கல்விக்கடன் முகாம், கடன் மேளா நடத்தவுள்ளது. இதன் முதல் கட்டமாக, வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள்  பங்குபெறும் சிறப்பு கல்வி கடன் வழங்கும் மேளா வேலூர் சாய்நாதபுரத்தில் அமைந்துள்ள டி.கே.எம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.   இம்முகாமில் இ-சேவை மையம் அமைக்கப்படவுள்ளது. எனவே. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல், பான், ஆதார் அடையாள அட்டைகள் சாதி, வருமானம், முதல் தலைமுறை பட்டதாரி, கல்லூரியில் வழங்கப்படும் சான்றுகள் மற்றும் கல்விக்கடன் தேவை விவரம் ஆகியவற்றுடன் மேற்படி முகாமில் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் இந்த சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாமினை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி ஓர் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  3 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை, ஆக. 25– விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் கடத்திவரப்பட்ட 13.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒருவரை கைது செய்தனர். விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணிகளை ரயில்வே காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த ரயிலில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி அவர் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர். அப்போது அந்த பையில்  ரூ. 6.9 லட்சம் மதிப்புள்ள 13.8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கேரளாவின் வயநாட்டைச் சேர்ந்த அக்ஷய் எஸ் (23) என்பவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அந்த ஆசாமியை தமிழ்நாடு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மீன்வளக் கல்லூரியில் விளையாட்டு மற்றும் வினாடி வினா போட்டி

திருவள்ளூர், ஆக 25- பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் மாநில அளவிலான  விளையாட்டு மற்றும் வினாடி வினா போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர். பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாநில அளவிலான விளையாட்டு மற்றும் வினாடி வினா போட்டி ஆக் 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதனை கல்லூரி முதல்வர்  பேராசிரியர் சு. பாலசுந்தரி தலைமையேற்று துவக்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி  பெற்ற கல்லூரிகளுக்கு கனரா வங்கி மேலாளர்  பி.உஷாராணி  பரிசுகளை வழங்கினார். வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பி.ஜெயநாராயணா பரிசுகளை வழங்கினார். இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து 14  கல்லூரிகளிலிருந்து 430 மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளிலும், 6 கல்லூரிகளில் இருந்து 120 மாணவர்கள் வினாடி வினாடி மற்றும் மற்ற போட்டிகளிலும் கலந்து கொண்டனர். இதில் மாணவர்கள்  ஆர்வமுடன் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர். இதனை உடற்கல்வி இயக்குநர் ஏ. கண்ணன், உதவி பேராசிரியர்கள் அருண் ஜெனிஸ், எஸ்.சரவணன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.

மர்ம விலங்கால் பொதுமக்கள் பீதி!

விழுப்புரம், ஆக.25- திண்டிவனம் அருகே மர்ம விலங்கு கடித்ததில் 13 ஆடுகள் பலி. 10க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம விலங்கு ஆடுகளை கடித்து கொன்று வருகிறது. இந்நிலையில் திண்டிவனம் அடுத்த வெள்ளி மேடுபேட்டை கிராமத்தை சேர்ந்த செல்வம் மனைவி செல்வி (47) என்பவர் புத்தனந்தல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 30க்கும் மேற்பட்டஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளை நடராஜன், சித்ரா என்கிற முதிய தம்பதிகள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று மீண்டும் மாலை பட்டியில் ஆடுகளை அடைத்து அருகில் உள்ள கொட்டகையில் இருவரும் தூங்கியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் ஆடுகள் அலறும் சத்தம் கேட்டு சென்று பார்த்த போது மர்ம விலங்கு ஒன்று ஆட்டு பட்டியில் இருந்த ஆடுகளை தாக்கி கடித்துகொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து தப்பி இருவரும் ஊருக்குள் சென்று ஆட்களை அழைத்து வருவதற்குள்  13-ஆடுகள் இறந்தும், 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலத்த காயத்துடனும் இருந்துள்ளது.இது குறித்து தகவலறிந்த  வெள்ளிமேடுபேட்டை போலீசார், வனத்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் தடயங்களை சேகரித்து அப்பகுதி யில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது.