tamilnadu

img

மாணவர்களின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வை ரத்து செய்க... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை:
மாணவ,மாணவியர்களின் உயிரை பலிவாங்கும் மருத்துவப்படிப்புச் சேர்க்கைக்கான  நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மருத்துவராக வேண்டும் என்ற மாணவர்களின் கனவை  நீட் தேர்வின் மூலம் தகர்த்து வருகிறது மத்திய அரசு.  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென  நாடு தழுவிய அளவில் பலத்தஎதிர்ப்புகள் எழுந்தபோதும் மத்திய  பாஜக அரசு எதற்கும் செவி சாய்க்காமல் நடத்தியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. நீதிமன்றங்களும் அதற்கு ஆதரவாகத்தான் இருக்கின்றன.  இதன் விளைவாக,எத்தனையோ மாணவர்களும் மாணவிகளும் மருத்துவக் கனவு தகர்ந்து  தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள். 

கடந்த 8 ஆம் தேதி,  அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் தேர்வுஎழுத தயாராகி வந்த நிலையில், அவருக்குஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக  கிணற்றில்குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதேபோல் வெள்ளிக்கிழமையன்று மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்காநீட் தேர்வு எழுத தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்  தூக்குப்போட்டு  தற்கொலை செய்துகொண்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 
ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால்தான் இதுபோன்ற மாணவச் செல்வங்களின் உயிரிழப்புக்களை தடுக்கமுடியும். உயிரிழந்த மாணவன் விக்னேஷ் குடும்பத்தினருக்கும், மாணவி ஜோதிஸ்ரீ துர்காகுடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. 

விபரீத முடிவு வேண்டாம்
நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி போராடவேண்டுமே தவிர, இப்படிப்பட்ட தற்கொலை போன்ற விபரீதமான முடிவுக்கு போக வேண்டாமென மாணவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.கடந்த ஆறு மாத காலமாக கொரோனா நோய்த்தொற்று இருக்கிற சூழ்நிலையில், நாளுக்கு நாள்  நோய்த்தொற்று அதிகரித்து வருகிற நேரத்தில், நீட் தேர்வை நடத்துவது எப்படிப்பட்ட பாதிப்புகளை  உண்டாக்கும், தேர்வு எழுதுகிற  மாணவர்களுக்கு ஏற்படுகிற மன அழுத்தத்தினால் அவர்களின் தேர்வு பாதிக்கப்படுமே, அதனால் அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகுமே என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல், தேர்வை கட்டாயம் நடத்தியே தீருவோம் என்ற மத்தியஅரசின் போக்கு கண்டிக்கத்தக்து. இதைக்கண்டும் காணாது இருக்கும் மாநில அரசின் நடவடிக்கையும் ஏற்புடையதல்ல. எனவே, மத்திய அரசு உடனடியாக நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.  மாநில அரசு தனக்கு இருக்கக்கூடிய  வாய்ப்புகளை பயன்படுத்தி நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.  உயிரிழந்த ஜோதிஸ்ரீ துர்கா குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                              ************************

“நீட்” தமிழக அரசின் இரட்டை  வேடத்தால் பலியாகும் உயிர்கள்

நிவாரணம் மட்டுமே “நீட் வன்முறைக்கு” தீர்வாகாது. நீட் தேர்வைஉடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். குறிப்பாக தமிழக அரசு நீட் தேர்வில் இரட்டை வேடம்போடுகிறது. கொள்கை அளவில் நீட்தேர்வை எதிர்ப்பதாகக் கூறும் தமிழகம் நீட் தேர்விற்கு எதிராக ஆறுமாநிலங்கள் தொடுத்த வழக்கில்தங்களை இணைத்துக்கொள்ளவில்லை. மேலும் கொரோனா காலம்முடிந்தவுடன் நீட் தேர்வை நடத்திக்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு கூறுகிறது. கொள்கை அளவில் எதிர்ப்புஎன்பதை ஒரு போலி வேடமாகவே மாணவர் சங்கம் பார்க்கிறது.நீட் தேர்வு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மாநில அரசுகளின் உரிமையை பறிக்கக்கூடியது. ஜோதி ஸ்ரீதுர்கா நீட் தேர்வை நினைத்தே மன உளைச்சலில் தனது உயிரை மாய்த்துள்ளார். மேலும் அரசுப்பள்ளிகள்-அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வு ஒரு எட்டாக்கனியாகும்.நீட் தேர்வை முற்றாக ரத்து செய்யும்வரை இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து போராடுமென்றார்.

வீ.மாரியப்பன், எஸ்எப்ஐ மாநிலச் செயலளார்

                                              ************************

தமிழக அரசின் கள்ளமௌனமே காரணம்

அனிதாவில் தொடங்கி ஜோதி ஸ்ரீ துர்கா வரை பலியாகியிருப்பதற்கு மத்திய பாஜக அரசின் கேடுகெட்ட நீட் தேர்வே காரணம். 
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தவரை இந்தத் தேர்வு நடைபெறவில்லை. அம்மாவின் அரசு, அரசு என்று சொல்பவர்களின் கள்ள மௌனம் காரணமாகவே இந்தக் கொடுமை தமிழகத்தில் தொடர்கிறது. தமிழக மக்களுக்கு சொந்தமான மருத்துவக்கல்லூரிகளில் கூட்டாட்சி முறைக்கெதிராக மத்திய அரசின் தேர்வை திணிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. தற்கொலை தீர்வல்ல என்றபோதும் மாணவர்களின் தற்கொலைகளுக்கு மத்திய-மாநில அரசுகளின் மோசமான அணுகுமுறையே காரணம். 

எஸ்.பாலா, டிஒய்எப்ஐ மாநில செயலாளர்