சென்னை:
கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ.2000 மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புப்பை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் துவக்கி வைத்தார். ரேசன் கடைகளில் 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது.2-ஆவது கட்டமாக கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளானஜூன் 3ஆம் தேதி சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இத்துடன் கொரோனா நிவாரண உதவியாக 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.இலவசமாக வழங்கப்படும் இந்த மளிகைப் பொருள் பையில் கோதுமைமாவு-1 கிலோ, உப்பு- 1 கிலோ, ரவை-1 கிலோ, சர்க்கரை- ½ கிலோ, உளுத்தம் பருப்பு - 500 கிராம், புளி-250 கிராம், கடலை பருப்பு-250 கிராம், கடுகு-100 கிராம், சீரகம்-100 கிராம், மஞ்சள் தூள்-100 கிராம், மிளகாய் தூள்-100 கிராம், டீ தூள்-2 (100 கிராம்) குளியல் சோப்பு-1 (125 கிராம், துணி சோப்பு-1 (250 கிராம்) ஆகியவை இருந்தது.
கோவில் அர்ச்சகர்கள்...
ஒருகால பூசையுடன் இயங்கும் 12 ஆயிரத்து 959 கோவில்களில் மாதச் சம்பளமின்றி பணிபுரியும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியாக ரூ.4 ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப்பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பத்திரிகையாளர்கள்...
கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தினமணி நிருபர் சரவணகுமார், சன்டிவி கள்ளக்குறிச்சி மாவட்டச் செய்தியாளர் கணேச மூர்த்தி, மதுரை தினகரன் புகைப்பட செய்தியாளர் நம்பி ராஜன் ஆகியோர் குடும்பத்துக்கு காசோலையையும் முதலமைச்சர் வழங்கினார்.கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவ பணி யாளர்கள், காவலர்கள் மற்றும் நீதிபதி கள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட பயனாளிகள் 10 பேருக்கு அரசு பயன்களையும் அவர் வழங்கினார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரிய சாமி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அர.சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், ஆவடி நாசர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
*************
மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம்...
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர் தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.முன்னதாக அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு, அண்ணா அறிவாலயம், கருணாநிதி வசித்த கோபாலபுரம் மற்றும் சிஐடி நகர் இல்லங்களுக்கும் சென்று அவரது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்பத்தினர் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.துரைமுருகன், கே.என்.நேரு டி.ஆர் பாலு, பி.கே.சேகர்பாபு, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மரக்கன்றுகள்
இதையடுத்து மாவட்டந் தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.அதனைத் தொடர்ந்து, புதிதாக ஆறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.சென்னைப் பெருநகரத்தில் உள்ள கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில், 250 கோடி ரூபாய் செலவில் 500படுக்கை வசதிகளுடன் கூடியபன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனை ஒன்று அமைக்கப்படும்.
மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்
சென்னை கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக இந்த நூலகம் விளங்கி வருகிறது.தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கும் இது போன்ற அரியவாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, 2 லட்சம் சதுர அடி பரப்பில் நவீன வசதிகளுடன் ரூ. 70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் ஒன்று உருவாக்கப்படும்.
இலக்கிய மாமணி விருது
இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், ‘இலக்கியமாமணி’ என்ற விருது உருவாக்கப்பட்டு, எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். இவ்விருதாளர்களுக்கு பாராட்டுப் பத்திரம் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படும்.
கனவு இல்லம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்.
நெல் சேமிப்பு கிடங்கு
திருவாரூர் மாவட்டத்தின் நெல் உற்பத்தியை கருத்தில் கொண்டும், விவசாய விளைபொருட்கள் மழைவெள்ள பாதிப்பினால் சேதமடைவதை தவிர்ப்பதற்கும் கிராமப்புற அளவில் ரூ. 24 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 16,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.
இலவச பயணச் சலுகை
மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளும் நகர்ப்புற அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.