சென்னை:
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, கூட்டுறவு - பொதுத்துறை சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு ரூ.138 கோடி கரும்பு பணப்பாக்கி வழங்கப்படும் என்று சர்க்கரை துறை ஆணையர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பிப்ரவரி 5 அன்று மாநில சர்க்கரை துறை ஆணையரை சந்தித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கூட்டுறவு - பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய எஸ்.ஏ.பி. பாக்கியை தாமதமின்றி விவசாயிகளுக்கு வழங்கிடவேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. உடனடியாக 51 கோடி ரூபாயும் அடுத்த வாரத்தில் 87 கோடி ரூபாயும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றுசர்க்கரை துறை ஆணையர்கூறினார்.
திருத்தணி ஆலை போராட்டம் வெற்றி
2019-20 ஆம் ஆண்டில் திருத்தணிகூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரைத்த கரும்புக்கு ரூ.8 கோடி பாக்கி இருந்தது. பத்து மாதங்களாக தராத நிலையில் ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பிப்ரவரி 3 அன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வந்தது. பிப்ரவரி 5 அன்று மாநில சர்க்கரை துறை ஆணையருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பழைய எஸ்.ஏ.பி பாக்கி 5.5 கோடி ரூபாய் இன்றேவழங்கிவிடுவது, 2016-17 தர வேண்டிய பாக்கி ரூ.6 கோடி கரும்புபண பாக்கியை அடுத்த வாரம் கொடுத்து விடுவது. 2019-20 கரும்புபண பாக்கி ரூ.8 கோடியை அடுத்தபதினைந்து நாட்களில் வங்கியில் கடன் பெற்று கொடுத்து விடுவதுஎன ஒப்புக் கொள்ளப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதன் அப்படையில் திருத்தணி ஆலை முன்பு மூன்றாவது நாளாக நடைபெற்று வந்த உண்ணாவிரதப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. சர்க்கரை ஆலை அதிகாரிகள் பந்தலுக்கு வந்து பழச்சாறு கொடுத்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் மாநிலச் செயலாளர் சி.பெருமாள், மாநிலக்குழு உறுப்பினர்கள் பாபு, சிரிநாத், ஜெயசந்திரன் உட்பட கரும்புவிவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.