சென்னை:
தமிழ்நாட்டில் விநாயகர் சிலை தொழில் செய்து வரும் 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவித்தது வருமாறு:-
நமது மாநிலத்தில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரக்கூடிய சுமார் 12 ஆயிரம் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு, மழைக் காலங்களில் தொழில் செய்ய இயலாத நிலையில் நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.இவர்களுள், சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் திருவிழாக் காலங்களில் விநாயகர் சிலைகளைச் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்ற ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக, பொது இடங்களில் விழாக்களைக் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது தொழிலை மேற்கொள்ள இயலாத நிலையில், அவர்களது வாழ்வாதாரம்கூட பாதிக்கப்பட்டிருக்கிறது.இதனையெல்லாம் இந்த அரசு கருத்தில்கொண்டு, இந்த 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக்காலப் பாதிப்பு நிவாரணத் தொகை போக, கூடுதலாக மேலும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக அளிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.இவ்வாறு முதலமைச்சர் அறிவித்தார்.