செம்புலப் பெயல் நீர்போல்
“முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழிக்காமல் இயற்கையையும், மனித குலத்தையும் காப்பாற்ற முடியாது ” மார்க்ஸ், ஏங்கல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையில் உரக்க அறிவித்தனர். வசந்த காலத்தை அறிவித்த சமூக மாற்றத்தின் படையாய் ரஷ்யாவில் தொழிலாளர், விவசாயிகளின் கூட்டுறவு ”செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.” என்ற சங்க கால குறுந்தொகைப்பாடலில் வரும் அன்பின் உறவாய் 1917இல் உருவானதே செந்தொண்டர் படை.
”செங்கொடி என்றதுமே ஒரு ஜீவன் பிறக்குதம்மா” என்ற இதயம் கசிந்த உயிர் துடிப்பின் நாதமாய் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு நாடுகளை கடந்து பயணித்தது. தேசத்தின் விடுதலையை, உழைக்கும் மக்களின் அரசை பாதுகாக்க முன்வரிசையில் நின்றது செந்தொண்டர் படை.
வலிகளை கடக்க போராடுவோம்
ரஷ்யாவில் ரொட்டிக்கு ஏங்கிய மக்களும், அமைதியற்ற வாழ்க்கையும், வேலை வாய்ப்பற்ற தேடலும் என ஒரு புறமும்,, மறுபுறம் திரும்பிய பக்கமெல்லாம் போரும், இழப்புகளும் என இரண்டாம் நிக்கோலஸ் என்ற ஜார் மன்னனின் அராஜகமான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் யோசித்துக் கொண்டிருந்தனர். இதற்கான வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் தோழர் லெனின் மார்க்சியத்தின் துணைக் கொண்டு தனது மகத்தான பங்களிப்பை ஆற்றினார்.
"மனிதனுடைய அறிவின் வியக்கத்தக்க சாதனைகள் சிலருக்கு மட்டுமே கிடைத்தன. கல்வி மற்றும் இதர அடிப்படைத் தேவைகள்கூட பெரும்பான்மையினருக்கு மறுக்கப்பட்டன. ஆனால், இப்பொழுது விஞ்ஞான முன்னேற்றம் மக்கள் அனைவருக்கும் பொதுவில் கிடைக்கிறது. இனிமேல் அறிவைப் பயன்படுத்தி மக்களைச் சுரண்ட முடியாது, மக்களை ஒடுக்க முடியாது. அதற்குத்தான் நம்முடைய முழு சக்தியைப் பயன்படுத்திப் புரட்சியின் லட்சியத்தை நிறைவேற்றுவோம் ” என மாமேதை லெனின் அறிவித்தார். 1917 சோசலிச அரசின் அறிவிப்பு கண்டு எட்டையபுரத்திலிருந்து அகம் மகிழ்ந்த மகாகவி பாரதியார் "ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி” என பாடினார்.
பொருளாதார வளர்ச்சியை விரைவாக முடுக்கிவிட வேண்டிய அவசியம் இருந்தது. சோவியத் நாட்டின் அதிக வேக வளர்ச்சி சோசலிச கட்டமைப்பின் கீழ் நடைபெற்றது இது ஒப்பிட்டளவில் முதலாளித்துவ அமைப்பு முறை 300 ஆண்டுகளில் செய்த சாதனையை சோசலிச சோவியத் அரசு 30 ஆண்டுகளில் சாதித்தது. மார்க்சியம் என்ற மகத்தான தத்துவ அறிவியல் அணுகுமுறை கொண்டு நடந்தது. இந்த புரட்சியை முன்னெடுத்து பாதுகாத்ததில் ரஷ்ய தொழிலாளி விவசாயி வர்க்கத்தின் கூட்டில் உருவான செந்தொண்டர் அணியும், போலிஷ்விக் கட்சி தோழர்களும் இணைந்து செம்படையாய் உருக்கொண்டது
தத்துவத்தின் வெளிச்சத்தில் துல்லிய அறிவிப்பு
சரித்திரப் புகழ் பெற்ற கட்சியின் மத்தியக்குழு கூட்டம் 1917, அக்டோபர் 10ம் தேதியன்று (அக்டோபர் 23) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான் சில நாட்களுக்குள் ஆயுதம் தாங்கிய எழுச்சியை ஆரம்பிப்பது என்று தோழர் லெனின் வகுத்து கொடுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது;
"ரஷ்யப் புரட்சியின் சர்வதேச நிலையையும், இராணுவ நிலைமையையும் மத்தியக் குழு உணருகிறது (உலக சோசலிசப் புரட்சி நடப்பதற்கு வேண்டிய நிலைமைகள் ஐரோப்பா முழுவதிலும் வளர்ந்திருப்பதை. ஜெர்மன் கடற்படையில் ஏற்பட்ட கலகம் குறிக்கிறது. ரஷ்யாவில் புரட்சி நடக்காமல் தடுப்பதற்கு ஏகாதிபத்திய உலகம் நம்மை பயமுறுத்துகிறது இவைதான் ரஷ்யப் புரட்சியின் சர்வதேச நிலைமை. பெட்ரோ கிராடை விட்டுவிடுவதென்று ரஷ்ய முதலாளிகளும் கெரேன்ஸ்கி குழுவும் முடிவு செய்திருக்கின்றனர் - இதுதான் இராணுவ நிலைமை.) பாட்டாளி வர்க்கக் கட்சி சோவியத்துகளில் பெரும்பான்மை பெற்றிருக்கிறது.
ஆயுதம் தாங்கிய எழுச்சிக்கு போல்ஷ்விக்குகள் மிகவும் தீவிரமாக சுறுசுறுப்புடன் தயாரிப்புகளைச் செய்தனர். மாஸ்கோ, பெட்ரோகிராட் இரண்டு தலைநகரங்களிலும் போல்ஷ்விக்குகள் மெஜாரிட்டியைப் பெற்றுவிட்டதால், இனி அரசாங்க அதிகாரம் அனைத்தையும் உள்ளூர் மக்கள் தங்களுடைய கையில் எடுத்துக்கொள்ள வேண்டும்; அவர்களே எடுத்துக்கொள்ள முடியும் என்று லெனின் கூறினார். மேலும் அதுவரை முன்னேறி வந்திருந்த பாதையைத் திரும்பிப் பார்த்து விமர்சனம் செய்து. பெரும்பாலான மக்கள் நம் திட்டத்தை ஆதரிக்கிறார்கள்” என்று லெனின் அழுத்தந் திருத்தமாகக் கூறினார்.
எழுச்சியின் வெற்றிக்கு உறுதி அளிக்கும் பொருட்டு இராணுவப் படைப் பகுதிகளையும், கடற்படையையும், செந்தொண்டர் படையையும் எப்படியெப்படிப் பயன்படுத்த வேண்டும், பெட்ரோகிராடில் எந்தெந்த கேந்திரமான இடங்களை முதலில் பிடிக்க வேண்டும் என்பதை மத்தியக் குழுவுக்கும். போல்ஷ்விக் அமைப்புகளுக்கும் எழுதிய கடிதங்களில் விளக்கிக் கூறி எழுச்சிக்கு லெனின் ஒரு விரிவான ஆழமான திட்டத்தை வகுத்து கொடுத்தார்.
அக்டோபர் 24-ந்தேதியன்று (நவம்பர் 6) பொழுதுபுலர்வதற்கு முன்பு கெரேன்ஸ்கி தாக்குதலைத் தொடுத்தான். "ரபோச்சி புட்" (தொழிலாளர் பாதை) என்ற போல்ஷ்விக் மத்தியப் பத்திரிகையை வெளிவராமல் தடுத்து அடக்கும்படி உத்தரவிட்டான். இதற்காக அதனுடைய ஆசிரியர் செயலகத்திற்கும், போல்ஷ்விக் அச்சுக்கூடத்திற்கும் கவசமோட்டார் படையை அனுப்பினான். ஆனால் கெரேன்சியின் படையை தோழர் ஸ்டாலின் இட்ட கட்டளைப்படி செந்தொண்டர்களும், புரட்சிக்காரவீரர்களும் கவசமோட்டார்களை எதிர்த்து நின்று முன்னேற்றத்தைத் தடுத்துப் பின்னுக்குத் தள்ளினார்கள். உடனே “ரபோச்சி புட்" காரியாலயத்திற்கும் அச்சுக்கூடத்திற்கும் முன்னைவிட அதிகமாகச் செந்தொண்டர்கள் வரவழைக்கப்பட்டு, வாசலில் காவலாக நிறுத்தப்பட்டனர். உள்ளே வெகுவேகமாக பத்திரிகை தயாராயிற்று. 11 மணிக்குள் அச்சடிக்கப்பட்டு “தற்காலிக சர்க்காரை வீழ்த்துக! '' என்ற அறைகூவலை முதல் பக்கத்தில் தாங்கி “ரபோச்சி புட்” வெளிவந்தது. இதே சமயத்தில் எழுச்சிக்கு வழிகாட்டிய கட்சி மத்திய தலைமையின் உத்திரவிற்கு இணங்க, செந்தொண்டர் படையும் புரட்சிக்காரர்களின் படைப் பகுதிகளும் மோலினிக்கு வெகு விரைவாக அனுப்பப்பட்டன.
எழுச்சியின் முன்னணியில் செம்படை
அக்டோபர் 24 ம் தேதி (நவம்பர் 6) இரவு லெனின் ஸ்மோல்னிக்கு வந்து சேர்ந்தார். களத்திலிருந்து எழுச்சிக்கு நேரடியாக வழிகாட்டி நடத்த ஆரம்பித்தார். அன்று இரவு தற்காலிக சர்க்கார் வீற்றிருந்த வின்டர் பாலஸைச் (குளிர்கால அரண்மனை) செந்தொண்டர் படை மற்றும் பரட்சிகர இராணுவம் சுற்றி வளைத்தது. அக்டோபர் 25-ம் தேதியன்று (நவம்பர் 7) புரட்சிகர படை வீரர்களும், செந்தொண்டர்களும் சேர்ந்து ரயில்வே நிலையம் தபால் அலுவலகம், தந்தி அலுவலகம், மந்திரிகளின் அலுவலகம் செயலகங்கள், அரசாங்க பாங்க் முதலிய இடங்களைக் கைப்பற்றினர்.
பெட்ரோகிராட் சோவியத்துக்கும், போல்ஷ்விக் மத்தியக் குழுவுக்கும் தலைமை செயலகமாக இருந்த ஸ்மோல்னி, புரட்சியின் தலைமைச் செயலகமாயிற்று. சகல உத்திரவுகளும் இங்கிருந்தே புறப்பட்டன.
பெட்ரோகிராட் தொழிலாளர்கள் போல்ஷ்விக் கட்சி காட்டிய வழியைப் பின்பற்றியதனால் எத்தகைய அபூர்வமான போதனையையும், பயிற்சியையும், தேர்ச்சியையும் பெற்றிருந்தனர் என்பதை நடைமுறை செயலில் காட்டினர். எழுச்சிக்காக இராணுவத்தில் போல்ஷ்விக்குகள் செய்த வேலையின் பயனாய் ஆயத்தப்படுத்தப்பட்ட புரட்சிகர இராணுவப்பகுதிகள், செந்தொண்டர்களுடன் சேர்ந்து நின்று போல்ஷ்விக் கட்சியின் கோட்டையாக விளங்கிவந்த ஒவ்வொரு உத்திரவையும் நிறைவேற்றினார்கள். கடற்படையில் "அரோரா" தன் பிரங்கிகளை உயர்த்தி குளிர்கால அரண்மனை மீது பொழிந்த குண்டுகளிலிருந்து இளம்பிய இடியோசை, புதிய காலகட்டத்தித்த கட்டியங் கூறியது. மகத்தான சோசலிசப் புரட்சி காலகட்டத்தை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்திற்று.
அக்டோபர் 25 தேதியன்று (தவம்பர் 7) போல்ஷ்விக்குகள் மக்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டனர். "முதலாளித்துவ தற்காலிக அரசு விலக்கிக் கொள்ளப்பட்டது; அரசாங்க அதிகாரம் முழுவதும் சோலியத்துகளிடம் வந்துவிட்ட என்று அவ்வறிக்கை அறிவித்தது. குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர், தற்காலிக அரசின் நபர்களைக் கைது செய்தனர்.
தொழிலாளி விவசாய வர்க்கத்தின் ஒற்றுமை
பெட்ரோகிராட் எழுச்சி வெற்றியடைந்துவந்தபோதே தலைநகரத்தில் அதிகாரம் முழுவதும் பெட்ரோகிராட் சோவியத்தின் மாறிவிட்டபோதே -அக்டோபர் 25-ம் தேதி: (நவம்பர் 7) காலை பத்தேமுக்கம் மணிக்கு அகில ரஷ்ய சோவியத்துகளின் இரண்டாவது காங்கிரஸ் ஸ்மால்னியில் கூடிற்று.
"மிகப்பெரும்பாலான தொழிலாளரும், விவசாயிகளும், இராணுவத்தினர் விரும்புகிற விருப்பத்தின் ஆதரவை பலமாக கொண்டும் நடந்தேறியிருக்கிற வெற்றிகரமான எழுச்சியின் ஆதரவை அரசாங்க அதிகாரங்கள் முழுவதையும் சோவியத்துகளுடைய இந்தக் காங்கிரஸ் தன்கையிலேயே எடுத்துக் கொள்கிறது என அறிவித்தது
”ரஷ்யத் தொழிலாளிவர்க்கம் போன்ற ஒரு புரட்சிகரமான வர்க்கத்தின் தலைமையில் அக்டோபர் புரட்சி நடந்தது. போராட்ட உலைக்களத்தில் அந்த வர்க்கம் தீயில் மூழ்கி பதம்பட்டிருந்தது, மிகவும் குறுகிய காலத்திற்குள் இரண்டு புரட்சிகளைச் செய்தது; மூன்றாவது புரட்சி ஆரம்பமாவதற்கு முன் சமாதானத்திற்காகவும்; நிலத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும், சோசலிசத்திற்காகவும் நடந்த போராட்டத்தில் மக்களின் தலைமையாக ஏற்கப்பட்டது. ரஷ்யத் தொழிலாளி வர்க்கம் போன்ற மக்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு தலைமையை புரட்சி அடைதிருக்கா விட்டால் தொழிலாளருக்கும், விவசாயிகளுக்குமிடையே ஒரு கூட்டுறவு ஏற்பட்டிருக்காது. இந்த கூட்டு இல்லாமல் அக்டோபர் புரட்சி வெற்றி பெற்று இருக்க முடியாது.”
துரோகத்தை வென்ற செம்படை
ஜெர்மனுடன் போர் சமாதான ஒப்பந்தம் குறித்து பேச சென்ற சோவியத் தூதுக்குழுவின் தலைவர் டிரட்ஸ்கி தன்னிச்சையாக சோவியத் ராணுவத்தை கலைத்து கொள்வோம், என கூறியது கட்சியின் மத்தியக்குழுவின் தீர்மானம், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறி டிரட்ஸ்கி தாய் மண்ணுக்கு துரோகம் இழைத்தார். இது படுபாதகம்; கொடூர அக்ரமம். சோவியத் அரசை அழிப்பதற்கு இவ்வுதவியைவிட வேறு எதையும் அதிகமாக இந்தத் துரோகியிடமிருந்து ஜெர்மன் ஏகாதிபத்தியவாதிகள் பெற விரும்பியிருக்க மாட்டார்கள்.
ஜெர்மன் அரசு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உடனே உடைத்து; சோவியத்து குடியரசு மீது தாக்குதலைத் தொடுத்தது. ஜெர்மன் சேனையின் திடீர்த் தாக்குதலைத் தாங்கமுடியாமல் ஈடசடவென்று சரிந்து சிதறி ஓடின. ஜெர்மானியர் விஸ்தாரமான பிரதேசங்களைப் பிடித்துக்கொண்டே வெகு வேகமாக முன்னேறினார்கள். ஜாருடைய சேனையில் அழிந்துபோனதுபோக மிஞ்சி நின்ற படைகள், ஜெர்மன் ஏகாதிபத்திய படைகளை எதிர்த்து நிற்க முடியாமல் அடிகளை வாங்கிக்கொண்டே நிதானமாகப் பின்வாங்கின. அதே நேரத்தில் ஆயுதபாணிகளாக ஜெர்மன் ஏகாதிபத்தியவாதிகள் தலையிட்டார்கள் என்ற செய்தி, தேசமெங்கும் மகத்தான, பிரம்மாண்டமான, புரட்சிகரமான எழுச்சியை உண்டு பண்ணிற்று.
செஞ்சேனையின் பிறப்பு
சோசலிஸ்ட் தாய் நாட்டிற்கு அபாயம்!" என்று கட்சியும், சர்க்காரும் மக்களுக்கு அறைகூவல் விடுத்தன. இதைக் கேட்டதும் தொழிலாளி வர்க்கம் வீறு கொண்டு ஆர்த்தெழுந்தது. ஆங்காங்கே வெகுவேகமாக சுறுசுறுப்புடன் தொழிலாளி வர்க்கம் செஞ்சேனைப் பட்டாளங்களை அமைக்க ஆரம்பித்தது. புதிய சேனையின் இளம் படைகள் வீரதீரத்துடன் சமர் புரிந்தன. இதன் பயனாய், நார்வா, புஸ்கோவ் மற்றும் பெட்ரோகிராடை நோக்கிய அவர்களுடைய முன்னேற்றம் உறுதியாக தடுக்கப்பட்டது. ஜெர்மன் ஏகாதிபத்தியப் படைகளைத் தடுத்து முறியடிக்கப்பட்ட தினம்தான் பிப்ரவரி 23-ம் தேதி செஞ்சேனை பிறந்த தினமாக வருடாவருடம் கொண்டாடப்பட்டு வருகிறது.
"சமாதான உடன்படிக்கை செய்துகொள்வதற்கு உடனடியாக முன்வர வேண்டும்" என்று ஜெர்மன் அரசுக்குத் தந்தியடிப்பது என்று லெனின் கூறிய யோசனையை கட்சியின் மத்தியக் குழு ஏற்றது. ஜெர்மானியர் முன்னைவிட தங்களுக்கு அதிக சாதகமான ஷரத்துகளை உடன்படிக்கையில் திணிக்க விரும்பினர்;
"உண்மையான தொழிலாளி விவசாயி சேனையை பிரதானமாக கிராமப்புறங்களில் கண்டிப்பான கட்டுப்பாட்டோடு கூடிய சேனையை நாம் உருவாக்க வேண்டும். இதன்மூலம் நாம் குடியரசைப் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் நாம் அழிவது நிச்சயம்" என்று ஸ்டாலின் கூறினார். மேலும் மத்திய இராணுவ அமைப்புகளின் வேலையைச் சீர்படுத்த வேண்டும் என்றும், சேனையில் கம்யூனிஸ்டுகள் வகிக்கும் பங்கின் தன்மையை மேன்மைப்படுத்த வேண்டும் என்று மத்தியக்குழு வலியுறுத்தியது. செஞ்சேனையைப் பலப்படுத்துவதும், கட்சியுடன் அதை முன்னைவிட நெருக்கமாக்க் கொண்டு வருவதும் பலனைதரும் என்றார்.
இத்தகைய பலத்தோடு கட்டமைக்கப்பட்ட செஞ்சேனைதான் மக்களின் பிரதான பாதுகாவலனாக மட்டுமல்லாது சேவகனாக பணியாற்றியது. தேச கட்டுமானத்திலும், அனைத்துத்துறை வளர்ச்சியிலும் செம்படை தனது அசாத்திய திறனை வெளிப்படுத்தியது. சோவியத்தின் கல்விமுறையும், சோசலிச அமைப்பு முறையும் இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியது. இரண்டாம் உலக யுத்தத்தில் பாசிச, நாசிச சக்கிகளை எதிர்த்து உலகம் இதுவரை கண்டிராத இழப்புகளை சோவியத் செம்படை சந்தித்து மக்கள் உட்பட இரண்டறை கோடிபேரின் உயிர்களை தியாகம் செய்து, தேசத்தின் வளத்தில் பெரும் பகுதியை யுத்தத்தில் இழந்து அதற்கு பிந்தைய ஆண்டுகளில் வெகுவிரைவாக தனது வளர்ச்சியை உறுதி செய்தது. கட்சியின் வழிகாட்டும் பாத்திரம் தன்னலமற்ற செம்படையின் மகத்தான தியாகமும் இந்த பூமிப்பந்தை பாதுகாத்தது என்றால் மிகையல்ல.
அத்தகைய தேச நலம் காக்கும் இளம் தோழர்களை கொண்ட அணியாக செந்தொண்டர் அணி இங்கே உருக்கொள்கிறது. மதுரையின் வீதிகளில் அணிவகுக்க வருகிறது. சரித்திரம் படைத்தவர்களை காண அணிதிரண்டு வாருங்கள்.
- செ.முத்துக்கண்ணன்