tamilnadu

img

“சர்வரோக நிவாரணி அல்ல  இடஒதுக்கீடு!”

முன்னேறிய சாதியினரில் பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கு பத்து சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சியில் மத்திய பிஜேபி அரசு ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசால் சமீபத்தில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக உட்பட 16 கட்சிகள், பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. பிஜேபி, காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட ஐந்து கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதைத் தொடர்ந்து சிபிஎம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

 சமூகரீதியாகவும், கல்விரீதியாகவும் நீண்டகாலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களை முன்னேற்றுவதற்கான ஓர் ஏற்பாடுதான் இடஒதுக்கீடு. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்று கொண்டுவந்தால், அது இடஒதுக்கீடு முறைக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை உங்கள் கட்சி ஆதரிப்பதற்கு என்ன காரணம்?

இந்திய சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறதோ, அதே அளவுக்குப் பொருளாதார ஏற்றத்தாழ்வும் இருக்கிறது. இதுதான் யதார்த்தம். மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்று, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை வி.பி.சிங் அறிவித்தார். அதே வி.பி.சிங் தான் பொருளாதார ரீதியில் பின்தங்கிய இதர வகுப்பினருக்கு 5-10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டார். வி.பி.சிங் அரசு கவிழ்ந்து, பிறகு நரசிம்ம ராவ் அரசு அமைந்தது. அதன் பிறகு வி.பி. சிங் அறிவித்திருந்த 27 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான உத்தரவு போடப்பட்டது. அதேநேரத்தில், வி.பி.சிங் அறிவித்ததன் அடிப்படையில், பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடும் கொண்டுவரப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நீதிமன்றம் நிராகரித்தது. ஏனென்றால், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க, அரசியல் சட்டத்தில் இடம் இல்லை. எனவேதான் மோடி அரசு வந்த பிறகு, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு அரசியல் சட்டத்தை திருத்த முயற்சிகள் தொடங்கின. அதே சமயம் விவாதம் நடத்தி, எல்லோரிடமும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி இதைக்கொண்டுவர முயற்சி செய்யாமல், இதை வைத்து தேர்தல் ஆதாயம் பெற பிஜேபி முயற்சி செய்தது. அதை நாங்கள் கடுமையாக விமர்சித்தோம்.சிபிஎம் மட்டுமல்ல... மாயாவதியின் பகுஜன் சமாஜ், ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி உட்பட இந்தியாவில் உள்ள பல கட்சிகள் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்துள்ளன.என்ன பிரச்சனை என்றால், உலகமயக் கொள்கைகளால் தனியார்மயம் அதிகரித்து, அரசு வேலைவாய்ப்புகள் சுருங்கி வருகின்றன. இந்தச் சூழலில், தங்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்தால் நல்லது என்கிற எதிர்பார்ப்பு எல்லா தரப்பினரிடமும் இருக்கிறது.

அப்படியெனில், வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளைத்தானே எடுக்க வேண்டும். மாறாக, இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது சரியா?
வேலைவாய்ப்புகளைக் கட்டாயமாகப் பெருக்க வேண்டும். அதே நேரத்தில் தமிழ்நாட்டில் முன்னேறிய சாதியினரில் பலரை இடஒதுக்கீட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம். ஆனால்மற்ற மாநிலங்களில் இடஒதுக்கீட்டுக்குள் வராத மக்கள், சரிபாதி அளவுக்கு இருக்கிறார்கள். அவர்கள், இதர வகுப்பினர் என்று வைக்கப்பட்டுள்ளனர். எனவே, தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று அவர்கள் போராடுகிறார்கள். அது சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அவர்களின் கோரிக்கையை ஓரளவு நிறைவேற்றினால்தான் தற்போதுள்ள இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து இல்லாமல் இருக்கும்.

 இடஒதுக்கீட்டு ஆபத்து வரும் என்கிறீர்களே... அது எப்படி நிகழும்?
மேலும் மேலும் இடஒதுக்கீடு கொடுக்காதீர்கள் என்று குரல் எழும்போது, இடஒதுக்கீட்டுக்குள் வராதவர்கள் போராடுகிற நிலை ஏற்படுகிறது. அது, சமூகத்தில் கொந்தளிப்புச் சூழலை உருவாக்குகிறது. அதனால்தான், வி.பி.சிங் கூட பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு கோரிக்கையை பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்படியென்றால், பொருளாதாரத்தில் நலிவடைந்த அந்த மக்களைக் கைதூக்கிவிட, சிறப்பு நலத் திட்டங்களைச் செயல்படுத்தலாமே?
எந்தவொரு வறுமை ஒழிப்புத் திட்டத்தையும் குறிப்பிட்ட சாதிகளுக்கு மட்டும் என்று செய்ய முடியாது. இடஒதுக்கீடு என்று வந்தால்தான் அதைச் செய்ய முடியும்.

 ஆனால், அடிப்படையில் இது சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைத்துவிடும் என்று அச்சம் எழுந்துள்ளதே?
அப்படியல்ல. எந்த அரசாலும் அரசியல் சட்டத்தை தங்கள் இஷ்டத்துக்கு மாற்றிவிட முடியாது. அடிப்படையில், சமூகநீதி என்பதில் எங்கள் கட்சிக்கும் மற்ற கட்சிகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. இடஒதுக்கீடு என்பது ஒரு வலி நிவாரணம்தான். தலைவலிக்கு மாத்திரை சாப்பிடுவது மாதிரிதான். இதுவே சர்வரோக நிவாரணி கிடையாது. ஒட்டுமொத்தமாக சமூகக் கட்டமைப்பையே மாற்றியமைப்பது, வாழ்வாதார மேம்பாடுகளை உருவாக்குவது எனப் பல விஷயங்களை நாங்கள் முன்வைக்கிறோம்.ஒரு பகுதி மக்கள் போராடி ஒரு உரிமையைப் பெற்று, அதை அனுபவித்து வருகிறார்கள். அந்த மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் போதாது, நிலங்களைப் பிரித்துக் கொடுங்கள் என்று நாங்கள் சொல்கிறோம். இதுபற்றி வேறு யாருமே பேசுவதில்லை. இத்தனை காலமாக இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறதுதான். அதனால், தமிழகத்தில் வறுமை ஒழிந்துவிட்டதா? எங்களைப் பொறுத்தவரை எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி பிரிவு மக்களுக்கு இதில் கடுகளவும் பாதிப்பு இல்லாமல் செய்ய வேண்டும்.மேலும், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையும் அல்ல. அரசு இப்படியொரு முயற்சியை எடுக்கிறபோது, எங்கள் நிலைபாட்டைச் சொல்கிறோம். அதுவும், நிபந்தனையுடன் கூடிய ஆதரவைத்தான் நாங்கள் அளித்துள்ளோம். பத்து சதவிகிதம் என்பதை நாங்கள் ஏற்கவில்லை. இடஒதுக்கீட்டுக்குள் வராத மக்கள் ஏழு சதவிகிதமோ... எட்டு சதவிகிதமோ இருப்பார்கள். அவர்களுக்கு மூன்று சதவிகிதமோ, நான்கு சதவிகிதமோதான் இடஒதுக்கீடு வரும்.

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஆதரிக்கிற ஜேபி காங்கிரஸ் மீதான விமர்சனங்களைவிட, உங்கள் கட்சி மீதான தாக்குதல் அதிகமாக இருக்கிறதே?
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளும் தனி ஈழம்தான் தீர்வு என்றார்கள். நாங்களோ, ‘தனி ஈழம் சாத்தியப்படாது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுய அதிகாரம் படைத்த மாநிலங்களைக் கொண்டு வருவதுதான் நல்ல தீர்வு’ என்றோம். இந்தக் கருத்தை முன்வைத்த ஒரே ஒரு அரசியல் கட்சி நாங்கள் மட்டும்தான். அதற்காக நாங்கள் கடும் விமர்சனங்களுக்கு ஆளானோம். கடைசியில் என்ன நடந்தது? லட்சக்கணக்கான மக்கள் உயிரை இழந்து, வாழ்க்கை சிதைந்து, சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் நிலைமைதானே ஏற்பட்டுள்ளது. இப்போது, இடஒதுக்கீடு விஷயத்திலும் எங்களை சிலர் விமர்சிக்கிறார்கள். அதற்காகப் பாய்ந்து சென்று அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய கருத்தை அவர்கள் சொல்கிறார்கள். எங்கள் கருத்தை நாங்கள் சொல்கிறோம்.

உங்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உயர் சாதியினர் அதிகமாக இருப்பதால்தான் இப்படியொரு முடிவை எடுத்துள்ளீர்கள் என்று விமர்சனம் வைக்கப்படுகிறதே?
இது அநாகரிகமான வாதம். நாடு முழுவதும் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்காக நாங்கள் போராடி வருகிறோம். இ.எம்.எஸ் உயர் சாதியில் பிறந்தவர். ஆனால், கேரளத்தில் உள்ள ஈழவ மக்களுடன்தான் அவர் வாழ்ந்தார். அந்த மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட்டார். சீனிவாச ராவ், உயர் சாதியில் பிறந்தவர். அவர்தான், கீழ்த்தஞ்சையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்று நிலப்பிரபுக்களை எதிர்த்துப் போராடினார். பல அரசியல் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் சாதி மாநாடுகளுக்குப் போகிறார்கள், சாதி இயக்கங்களில் இருக்கிறார்கள், எல்லா சாதிகளையும் சேர்ந்தவர்கள் எங்கள் கட்சியிலும் இருக்கிறார்கள், அவர்கள் யாரும் சாதி அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்குப் போவதில்லை, எங்கள் கட்சியின் கடைசி ஊழியர்கள் கூட, சாதியை நிராகரித்து ஒரு கம்யூனிஸ்டாகத்தான் இருக்கிறார்கள், விஞ்ஞானப்பூர்வமான வாதத்தை முன்வைக்க முடியாத சிலர்தான், பண்பட்ட ஒரு கட்சியின் மீது சாதி முத்திரை குத்துகிறார்கள்.

ஆ. பழனியப்பன், (நன்றி : ஜூனியர் விகடன், 21-7-2019)