சென்னை, ஜூன் 6-மோட்டார் வாகன பயன்பாட்டினை குறைக்கும் வகையில் பொது மக்கள் கூடும் இடங்களை இணைத்து நடைபாதை மற்றும் சைக்கிள் பாதைகள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் காற்று மாசுபாடும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நகரின் மிக முக்கியமான பேருந்து நிலையங்களுக்கு அருகில் வாகன நிறுத்தம் அமைக்கும் திட்டம் 2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வழிவகை செய்ய முடியும்.இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் முக்கிய சாலைகளில் சைக்கிள் மற்றும் நடைபாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி முக்கிய சாலைகள் அனைத்தும் மாற்றியமைக்கப்பட உள்ளன. இதற்காக சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 59 கிலோ மீட்டர் பேருந்து சாலைகள் மற்றும் 11 கிலோ மீட்டர் நெடுஞ்சாலைகளில் ஆய்வு நடத்தப்பட்டது.இந்த ஆய்வின் முடிவில் சோதனை அடிப்படையில் நுங்கம்பாக்கம், ராயப்பேட்வை, தி.நகர், மயிலாப்பூர், கிண்டி, அடையார், வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட இடங்களில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.பள்ளிகள், அங்கன்வாடிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள், நீர் நிலைகள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட தினசரி பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை இணைத்து சைக்கிள் மற்றும் நடைபாதைகள் அமைக்கப்பட உள்ளது. இதில் முதற்கட்டமாக, நகரின் மையப்பகுதிகளை இணைக்கும் வகையில் 14 சைக்கிள் மற்றும் நடைபாதைகள் அமைக்கப்படுகின்றன. இரண்டாவது கட்டமாக, மற்ற இடங்களை இணைக்கும் வகையில் பாதைகள் அமைக்கப்படும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள இடங்களை, ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.இதுகுறித்து சிறப்பு திட்டங்கள் துறையின் தலைமை பொறியாளர் நந்தகுமார் கூறுகையில், சென்னை மாநகராட்சியில் மெரினா கடற்கரை, திருமங்கலம், அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே சைக்கிள் ஷேரிங் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை தவிர்த்து கொடி மரச்சாலை, சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் சாலை உள்ளிட்ட இடங்களில் சைக்கிள் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து 13 கிலோ மீட்டர் தொலைவிற்கு சைக்கிள் ஷேரிங் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. சர்தார் படேல் சாலை, வேளச்சேரி சாலை, டிஜிஎஸ் தினகரன் சாலை, டிஜி சாலை, பெசன்ட் நகர் 6வது மற்றும் 7வது அவென்யூ உள்ளிட்ட சாலைகளில் ரூ.35 லட்சம் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதை தவிர்த்து சென்னையில் பாலங்களின் கீழ் பகுதிகள் சீரமைக்கப்பட உள்ளன. பொது மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இந்த பகுதிகளில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது என்றும் அவர் கூறினார்.