திருப்பூர்:
பல்லடம் அருகே நில அளவீட்டு பணிகள் முடிவடைந்து உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு பகுதியில் மாற்றுப் பாதை வழியாக மீண்டும் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி துவங்கும் முயற்சியை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது உயர் மின் கோபுரம் அமைக்கும் பவர்கிரிட் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் விவசாயிகள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழக அரசின் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும் இணைந்து தமிழகத்தின் மாவட்டங்களான கோவை திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 12 உயர்மின் கோபுர திட்டப்பணிகளை அமல்படுத்தி வருகிறது. இத்திட்டப் பணிகளை மாற்றுப்பாதையில் நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வாவிபாளையம் கிராமத்தில் விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி உயர்மின் கோபுரம் அமைப்பதற்கான அளவீட்டு பணிகள் முடிவடைந்து, தற்போது உயர் மின் கோபுரம் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், அதே கிராமத்தில் மாற்று வழியாக மீண்டும் ஒரு உயர் மின் கோபுரம் அமைப்பதற்கான ஆயத்த பணிகளை வியாழனன்று பல்லடம் வட்டாட்சியர் தேவராஜ் தலைமையில், பவர்கிரிட் நிறுவன அதிகாரிகள் துவக்கினர். அங்கு பல்லடம் டி.எஸ்.பி ஸ்ரீ ராமச்சந்திரன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனை அறிந்த அப்பகுதி விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் மற்றும் பவர்கிரிட் அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி இப்பகுதியில் அளவீட்டு பணிகள் முடிவடைந்து, உயர்மின் கோபுர பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் விவசாய விளைநிலத்தில் எதற்காக அளவீட்டு பணிக்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகிறது எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அரசு அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் கூறினர் . ஆனால் கண்டிப்பாக எங்கள் பகுதியில் அளவீட்டு பணிகள் செய்யக்கூடாது என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.