tamilnadu

img

12 வயது சிறுவனுக்கு அரிதான முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை

சென்னை,ஜூன் 25- காஞ்சிபுரத்தை சேர்ந்த 12வயது சிறுவனுக்கு சென்னையில்  மிகவும் அரிதான முதுகுதண்டுவட அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சுமார் 11 மணிநேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையை  குளோபல் மருத்துவமனையின் மூத்த மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் நிஜெல் பீட்டர், மற்றும் முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் பானிகிரன் ஆகியோர் தலைமையிலான மூளைநரம்பியல், மயக்கவியல், தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர்கள் மற்றும் குழந்தை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். அந்த சிறுவன் பிறக்கும்போதே முதுகு தண்டுவடத்தில் ஒரு இணைப்பு தண்டு உருவாகி அதனால் முதுகில் கட்டியுடன் காணப்பட்டான். நாட்கள் பல  ஆக இது அவனது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. முதுகுத்தண்டு உரிய முறையில் வளராத காரணத்தால் இடது கால்களால் சரியாக நடக்கமுடியாமலும் அவனை அறியாமலேயே  அடிக்கடி சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டான். இந்த நிலையில் பல மருத்துவமனைகள் கைவிட்ட நிலையில் பெரும்பாக்கத்தில் உள்ள க்ளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் அவனது உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவனுக்கும் அவனது பெற்றோருக்கும் நம்பிக்கை ஊட்டினர்.இந்த பாதிப்பை சரி செய்ய மிகவும் சிக்கலான மற்றும் சவாலான அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருந்தாலும் குணப்படுத்தமுடியும் என்று உறுதியாக கூறினர். இதையடுத்து பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து சுமார் 11 மணிநேரம் நடத்தப்பட்ட  அறுவைசிகிச்சையில் சிறுவனின் முதுகுத்தண்டு சரி செய்யப்பட்டது. முதுகுத்தண்டின் அடிப்பகுதி வளரமுடியாமல் அழுத்திக் கொண்டிருந்த கொழுப்புக் கட்டிகள் அகற்றப்பட்டன. இதனால் சிறுவன் முன்பு போல்நடக்க முடிகிறது. படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டான். இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.5.50லட்சம் செலவானது. இதில் பாதித்தொகை கிரவுட் பண்டிங் என்ற முறையில் பலரிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்டது என்று  மூளை நரம்பு அறிவியல்துறையின் தலைவர் டாக்டர் தினேஷ் நாயக் கூறினார்.