tamilnadu

img

மழை தீவிரம்: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு

சென்னை,டிச.1- தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்க ளில் உள்ள அனைத்து அணைகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் எப்போதும் இல்லாத வகையில் மழை பெய்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு முன்னர் புறநகர் பகுதியில் கன மழை கொட்டித் தீர்த்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையை மூழ்கடித்த வெள்ளப்பெருக்கை நினைவு படுத்தும் வகையில் தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே நாள் இரவில் பலத்த மழை பெய்தது. தாம்பரத்தில் அதிகபட்சமாக 14 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. இதன் காரணமாக புறநகர் பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதன்பிறகு சென்னை யில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. தென்சென்னை பகுதியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 11.2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கிண்டியில் 10 செ. மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பலத்த மழையால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் நிரம்பி வருகின்றன. நெல்லை-தென்காசி, கன்னி யாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்க ளில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே குற்றால அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் கொட்டுவதால் ஆலங்குளம், பாகூர்சத்திரம் மற்றும்  சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்கள் முழுமையாக நிரம்பி யுள்ளன. நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான பாசன அணை யான பாபநாசம் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. இதனால் தாமிர பரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரங்களில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். சேர்வலாறு அணையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. புதிதாக தொடங்கப்பட்ட தென்காசி மாவட்ட எல்லைக்குள் அடங்கிய கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அட விநயினார் ஆகிய 5 அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இந்த அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறில் 150.60 மில்லி மீட்டர் மழை பதிவா கியுள்ளது. காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பாலத்தை மூழ்கடித்த படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடு கிறது. அகஸ்தியர் அருவியே தெரி யாத அளவுக்கு வெள்ளம்பாய்கிறது.  பாபநாசம் கோவில் படித்துறை, தலையணை ஆகிய இடங்களிலும் அதிகளவில் வெள்ளம் ஏற்பட்டு ள்ளது. இதனால் பாபநாசம் மலைப்பகுதிக்கு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் 18.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. தூத்துக்குடி கீழுர் ரயில் நிலையத்தில் தண்ட வாளத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் முத்துநகர், கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு ள்ளது. குமரி மாவட்டத்தில்  பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 1000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. குழித்துறை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 71.60 அடி தண்ணீர் உள்ளது. கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை காரண மாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து அணைகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வனத்துறையினரோடு சேர்ந்து காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆறுக ளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு ள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பவானி சாகர் அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் நீடிக்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 104.98 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2036 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. தேனி மாவட்டத்தில் மூல வைகை யாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 2090 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 51.40 அடியாக வும், சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 124.54 அடியாகவும் உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையின் மொத்த நீர் மட்டம் 60அடி. தற்போது அணையில் 47.79 அடி தண்ணீர் உள்ளது. அமராவதி அணையின் மொத்த நீர் மட்டம் 90 அடி. தற்போது 65.52 அடி தண்ணீர் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் எமரால்டு, பார்சன் வேலி, முக்குருத்தி, குந்தா ஆகிய அணைகளும் நிரம்பி உள்ளன. இதேபோல தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன. கடலூர் மாவட்டத்தில் 8 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீராணம் ஏரி நிரம்பி வழிகிறது. அறந்தாங்கியில் 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்திலும் தொடர் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. வேலூரில் பெய்த மழையால் சாத்தனூர் அணை நிரம்பி வருகிறது. புதுவையிலும் தொடர் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. அங்குள்ள பெரிய ஏரிகளான ஊசுட்டேரி, பாகூர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இருப்பி னும் புதுவையில் இந்த ஆண்டு மழை குறைவாகவே பெய்துள்ளது.